July 21, 2017

அரிசி ஆலைகளினால் அழியும், முஸ்லிம் கிராமம் - முதலமைச்சர் கண்களை திறப்பாரா..?

-ஆக்கம்: அஸ்லம் முகமட்-

நான் ஏறாவூர், மீராகேணி பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன்.அந்த வகையில் எனது சுவாசப்பைக்குள் சென்று வந்த வளி அளவில் நைதரசனுக்கு அடுத்ததாக அரிசி ஆலைகளின் உமிக்கரிகளே இருக்குமென்பது திண்ணம். மற்றும் கண்கள் கண்ட காட்சிகளில் அதிகமானவை உமிக்கரிகள் வளியாடு சேர்ந்து விளையாடிய காட்சிகளென்பதும் திண்ணம்.

இது என்னைப் போன்ற சக உறவுகளுக்கும் பழக்கமாகிப் போன அவஸ்தை என்றாலும் அடுத்த தலைமுறையும் இதே அவஸ்தையில்தானா வாழ வேண்டுமென்ற எழுதப்படாத விதிக்கு விடைகாண வேண்டிய தேவையுள்ளது. குடியிருப்பு வலயங்கள்,தொழிற்சாலை வலயங்கள் என்ற சொல்லாடல்கள் பாடப்புத்தகங்களில் மட்டும் தான் என்றதொரு உண்மை மீராகேணியை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்..

ஆரம்ப காலங்களில் "குழனி "என்றதொரு இழிவுச் சொல்லாடலோடு பார்க்கப்பட்ட இப்பிரதேசம் சில மக்கள் மனதிலும் ஆழமாய் வேரூன்றியதன் வெளிப்பாடு அங்கே போய் தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ளலாம்,மற்றும் அங்குள்ளவர்களை வைத்து  இலகுவாக வேலை வாங்கிக்

 கொள்ளலாமென்ற அசட்டு தைரியத்திலும்,இப்பகுதி எக்காலத்திலும் உருப்படாது நாம் உழைத்துக் களைத்து விடலாமென்ற நம்பிக்கையிலும் சில பணமுதலைகள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்கிறது..(இங்கு சில நடுநிலை நக்கிகள் நகர்ப் பிரதேசத்திலும் தானே கட்டப்பட்டன என வரிந்து கட்டிக்கொண்டு வருவர்..ஆமாம் எல்லைப்பிரதேசங்களில்...எல்லைகள்விரிவடைய விரிவடைய அவைகள் காணாமல் போயின.ஆனால் மிச்நகர்,மீராகேணி பிரதேசங்கள் இன்னும்??????)

ஆம் இன்னும் அதே இரத்தத்தில் பிறந்த இழிவு மனப்பான்மை கொண்ட அவர்களின் வாரிசுகளே ஆள்கிறார்கள் என்பதை மீராகேணியின் நுழைவாயிலில் வரவேற்கும் எதுவித கழிவு முகாமைத்துவமற்ற அரிசி ஆலைகள் சாட்சி பகர்ந்து நிற்கின்றன..

பகல் நேரங்களில் பாதையால் செல்லும் போது கண்களில் உமித்தூசி பட்டிருக்காத,அந்தி வேளையில் உமியிலிருந்து வந்து கண்ணைத் தாக்குகின்ற சில பூச்சிகளின் தாக்குதலுக்குள்ளாகியிராத அப்பாதையில் பயணித்த யாரும் இருக்க முடியாது(அரசியல்  "வியாதிகளையும்" அதிகாரிகளையும் தவிர.

ஏனெனில் அரசி வாகனத்தில் செல்வதாலும் அதிகாரிகளின் கண்களில் அரிசி துணிக்கைகள் விழுந்திருப்பதாலும்)

மேலும் இரவு வேளைகளில் சுமார் 9 மணிக்குப் பின்னால் ஆலை உரிமையாளர்களின் குறுக்குப் புத்தி வேலை செய்யத் தொடங்கும்.அதாவது கரிக்கப் படும் உமி துகள்களாக வெளியேறி பாதையால் செல்வோரின் கண்களைத் தாக்கும்.. இத்துகள்கள் கண்ணிலுள்ள மெல்லிய மென்படலங்களை கீறிக்கிழிக்கும் வல்லமையுடையவை. தவிர ஆலைகளுக்கருகில் இருப்பவர்கள் தப்பித்தவறியேனும் இரவில் வெளியில் ஆடைகளை காயப்போட்டுவிடக் கூடாது..அதிலும் பாடசாலை மாணவர்களென்றால் அடுத்த நாள் பெரும்பாலும் விடுமுறைதான்.

மேலும் ஆலைகளுக்கருகிலிருப்பவர்களின் வீடுகள் கூரைக்குக் கீழ் பொலித்தீன் அல்லது சீட் அடிக்கப்படாமலிருந்தால் இரவில்   தூக்கம் வரவில்லையே என்று மறந்தும் கண்ணைத் திறந்து விடக்கூடாது..திறந்தால் நிரந்தரமாக தூக்கம் போய் விடும். இவற்றுக்கு மேலாக அவ்வப்போது ஆலைகளில்இருந்து வரும் துர்நாற்றமோ கொடுமையிலும் கொடுமை...!

0 கருத்துரைகள்:

Post a Comment