Header Ads



கிழக்கில் முஸ்லிம், ஆளுநரை நியமியுங்கள் - சந்திரிக்காவிடமும், மைத்திரியிடமும் கோரிக்கை

-பீ.எம். முக்தார்-

முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென பேருவளை சீனன்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் அல்ஹாஜ் ராமிஸ் ஏ.கபூர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளார்.

இந்நாட்டில், 1988ஆம் ஆண்டு, அமரர் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டு, மாகாண ஆளுநர்களும்  நியமிக்கப்பட்டனர். ஆளுநர்களின் நியமனத்தில் சிறுபான்மை சமூகத்துக்கும் இடமளிக்கப்பட்டது.

தென் மாகாண ஆளுநராக மர்ஹூம் எம்.ஏ. பாக்கிர் மாக்கரும் மேல் மாகாண ஆளுநராக எஸ்.ஸல்வாநந்தாவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் மேல் மாகாண ஆளுநராக அஷ்ஷெய்யித் அலவி மௌலானா நியமிக்கப்பட்டார். அவரின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் ஆளுநர் ஒருவர் எப்பகுதிக்கும் நியமிக்கப்படாமை பெரும் குறையாக இருந்து வருகிறது.

முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென, 2016ஆம் ஆண்டு பேருவளை ஸாரா மண்டபத்தில், பேருவளை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எம்.எம்.எம். அம்ஜாதின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அல்ஹாஜ் ராமிஸ் ஏ. கபூர் வேண்டுகோள் விடுத்தார்.   

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆளுநர் நியமனத்தில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படாமை குறித்து வருத்தம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஆளுநர் பதவி வெற்றிடம் ஏற்படும் போது, இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக உள்ளது.

இவ்வெற்றிடத்துக்கு ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவேண்டிய தேவை உள்ளது. இதன்போது முஸ்லிம் ஆளுநர் ஒருவரை, கிழக்கு மாகாணத்துக்கோ அல்லது வேறு ஒரு பகுதிக்கோ நியமிக்க வேண்டுமென, சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் அல்ஹாஜ் ராமிஸ் ஏ. கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.