Header Ads



இஸ்ரேலின் அக்கிரமம் தொடர்கிறது, 900 பலஸ்தீனர்கள் காயம்

ஜெரூசலம் புனித அல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு எதிராக பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு அருகில் இஸ்ரேல் புதிதாக சிசிடிவி கெமராக்களை பொருத்தியுள்ளது.

புனிதத் தலத்தின் லயன்ஸ் கேட் நுழைவாயிலில் கடந்த வாரம் உலோகங்களை கண்டறியும் கருவி பொருத்தப்பட்ட நிலையில் மேலதிகமாகவே இந்த கண்காணிப்பு கெமராக்கள் ஞாயிறன்று இணைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் உலோகங்களை கண்டறியும் கருவி புனிதத் தலத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பலஸ்தீனர்கள் மற்றும் அரபு நாடுகள் கருதுகின்றனர். இதனையொட்டி கடந்த ஒரு வாரமான ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரை எங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் புதிய பாதுகாப்பு கெமராக்கள் மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கு வழி ஏற்படுத்தும்.

எனினும் இதுவரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோதல்களில் 900க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீன மருத்துவமனைகள் ஏற்கனவே காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு இடையில் இடம்பெற்ற மோதல்களிலேயே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் படை ரப்பர் குண்டு மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் இராணுவாம் பயன்படுத்தும் எஃகு பூசிய ரப்பர் தோட்டாக்கள் குறித்து சர்வதேச மனித உரிமை குழுக்கள் நீண்ட காலமாக கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் தொடர்ந்து ஒன்பதாவது தினமாகவும் இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு முஸ்லிம் வழிபாட்டாளர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்கு வெளியில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் உலோகங்களை கண்டறியும் கறுவியை கடந்து புனிதத் தலத்திற்குள் நுழைவதற்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி புனித பள்ளிவாசலுக்கு அருகில் மூன்று இஸ்ரேல் அரபு பிரஜைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இஸ்ரேல் பொலிஸார் கொல்லப்பட்ட நிலையில் இரு தினங்கள் மூடப்பட்ட பள்ளிவாசல் வளாகம் கடந்த ஜூலை 16 ஆம் திகதி திறக்கப்பட்டபோது அங்கு பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இதனை எதிர்க்கும் முஸ்லிம் வழிபாட்டாளர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைய மறுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் இடம்பெற்ற வன்முறைகளில் இதுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலஸ்தீனர்கள் தவிர, மூன்று இஸ்ரேலிய குடியேறிகள் கத்திக் குத்து தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஜெரூசலம் பதற்றத்தை தணிக்க பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் பல்வேறு தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவரது உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீனியர்கள் ஜோர்தான், சவூதி அரேபியா, எகிப்து, மொரோக்கொ மற்றும் ஏனைய தரப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக அப்பாஸின் இராஜதந்திர ஆலோசகர் மஜ்தி கால்தி குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கைவிடப்படும் வரை அதனுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் அறிவிப்பொன்றை அப்பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தார்.

பிராந்திய அமைப்பான அரபு லீக்கும், இஸ்ரேல் நெருப்போடு விளையாடுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தது. ஜெரூசலம் புனித தலங்களில் அத்துமீறல்களில் ஈடுபடுவதை எந்த ஒரு அரபு மற்றும் முஸ்லிம்களும் ஏற்பதில்லை என்று அரபு லீக் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெரூசலம் பழைய நகரில் இருக்கும் இந்த தலம் முஸ்லிம் மற்றும் யூதர் இரு தரப்புக்கும் புனிதமான பகுதியாகும். இங்கு யூத மதத்தின் இரு புனிதமான கோவில்கள் இருந்ததாக யூதர்கள் நம்புவதோடு இது மக்கா மற்றும் மதீனாவை அடுத்து முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகும்.

1967 மத்திய கிழக்கு யுத்தம் தொடக்கம் கிழக்கு ஜெரூசலம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. 

1 comment:

Powered by Blogger.