Header Ads



3 முஸ்லிம்கள் காணாமல் போனமை, நேரடி தொடர்புபட்ட கடற்படை அதிகாரி தசநாயக்கா

கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவமானது பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளார் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல படையதிகாரிகள் கைது செய்யப்படலாம் என தாகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் முகமாக இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே காவல்துறை ஊடகப் பேச்சாளார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய சம்பத் முனசிங்கவுக்கெதிராக கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கரண்ணாகொடவிடமிருந்து எழுத்துமூலம் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாட்டில், சம்பத் முனசிங்க தங்கியிருந்த இடத்தில் நான்கு பேரின் அடையாள அட்டைகள், ஒருவரது கடவுச்சீட்டு, சுமார் 450 வெடிபொருட்கள், தொலைபேசிகள், 10 லட்சம் பெறுமதியான உறுதிப் பத்திரங்கள் இரண்டு என்பன கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் ஏதேனும் தீவிரவாத அமைப்புடன் சம்பத் முனசிங்க தொடர்புபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டது.

அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நான்கு பேரின் விபரங்கள் வெளியாகின. அவர்களுள் மன்னாரைச் சேர்ந்த சூசைப்பிள்ளை அமலன் லியோன், அவரது மகனான சூசைப்பிள்ளை ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிகே அண்டனி மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தியாகராஜா ஜெகன் ஆகியோரின் அடையாள அட்டைகளே அவை என தெரிய வந்தது.

அதன் பின்னர் தெஹிவளை பிரதேசத்தில் 5 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் சம்பத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாதன் , விஸ்வநாதன் கிராண்பாஸை சேர்ந்த திலகேஸ்வர் ராமலிங்கம், மருதானையைச் சேர்ந்த மொஹமட் ஜமால்தீன் டிலான் மற்றும் தெமட்டகொடையைச் சேர்ந்த மொஹமட் சாஜித் ஆகியோரே கடத்தப்பட்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பொது கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெஹிவளையைச் சேர்ந்த மொஹமட் அலி அன்வர் என்பவர் கட்டுநாயக்கவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமையும், ரோஜான் ரீட் என்பவர் கொட்டாஞ்சேனை பகுதியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமையும் தெரியவந்தது.

கடத்திச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் கடற்படை தரப்பிலிருந்தும் இவற்றிற்கு வலுவான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடத்தப்உறவினருடன் உரையாடியமை மற்றும் தொலைபேசிக்கு மீள்நிரப்புமாறு கோரியமை என்பன தொலைபேசி அழைப்புகள் குறித்து மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன.

அத்தோடு, கடத்தப்பட்ட ஒருவரின் வாகனத்தின் இலக்கத்தை மாற்றி, அதனை கடற்படை வாகனத்தைப் போல பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் அண்மையில் கைதுசெய்யப்பட்ட டி.கே.பீ. தசநாயக்க இரண்டு குழுக்களை கொண்டு நடத்தியுள்ளார் எனவும் அதன் ஒரு குழுவிற்கு லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியும் மற்றைய குழுவிற்கு லெப்டினன்ட் ஜெனரல் ரணசிங்கவும் தலைமை தாங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் டி.கே.பீ. தசநாயக்காவை சந்தித்து கலந்துரையாடியமை, அவர் பாவித்த சிம் அட்டைகள் உள்ளிட்ட விடயங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் இவற்றைக் கொண்டு குற்றத்தப்பு பிரிவினரால் மேற்காள்ளப்பட்ட விசாரணையில், பணத்திற்காகவே இவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது எனவும் அதற்கான வலுவான சாட்சிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்படையின் 7 அதிகாரிகள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒருவரான சம்பத் முனசிங்க பிணையில் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்களை தவிர மேலும் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன 28 பேர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களின் 11 பேர் தொடர்பான விசாரணையே நிறைவடைந்துள்ளன எனவும் தெரிவித்த அவர் ஏனையோர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.