Header Ads



ஜனாதிபதியிடம் அந்த 2 யும் ஒப்படைக்க, மனோ கணேசனும் ஆதரவு

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியதைப் போன்று, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ்வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு, நீதி அமைச்சின் கீழ்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன, அவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். அவரும் அவற்றைக்கொண்டு, கடந்த ஆட்சியின் குற்றவாளிகளை மூன்று மாத காலத்துக்குள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

"நிதி  மோசடி விசாரணை பிரிவு, சட்டமாதிபர் திணைக்களம் ஆகியவற்றை என்னிடம் ஒப்படையுங்கள். நான் மூன்று மாத காலத்துக்குள் கடந்த ஆட்சியின் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்துகிறேன்" என, கடந்த அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக, பிரபல சிங்கள மொழி தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளதாவது, "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தவே கடந்த ஆட்சியின் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கருத்தை கூறியுள்ளார் என்பதை எவரும் மறுக்க முடியாது. அது இன்று ஒன்றும் சிதம்பர இரகசியம் அல்ல.

"எனவே, அந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேபோல் முன்னாள் ஆட்சியாளர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, தண்டனை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கும், தாம் அளித்த வாக்கு பயன்படுகிறதா என, அவதானிப்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.  

"இவை அனைத்தும் நடைபெற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியது போன்று, ச நிதி  மோசடி விசாரணை பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம் என்பன அவரிடமே ஒப்படைக்கப்பட்டு, குற்றவாளிகளை மூன்று மாத காலத்துக்குள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த கால அவகாசம் கொஞ்சம் முன்னே, பின்னே போனாலும் சரி. காரியம் நடக்க வேண்டும்.

"ஜனாதிபதி நினைத்தால், சட்டப்படி எந்தவோர் அமைச்சு விடயததையும் அவர் மீளபெறலாம். அதில் எந்தவித தடையுமில்லை. ஆனால், இது ஒரு தேசிய கூட்டாட்சி அரசாங்கம். எனவே தடாலடியாக அவரால் அமைச்சுப் பொறுப்புகளை மாற்ற முடியாது. அது அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்து விடும். ஆகவேதான் ஜனானதிபதி கேட்டுக்கொண்டதை போன்று அவருக்கு அந்த பொறுப்புகளை வழங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை இணங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.