Header Ads



''எம்மைக் காத்துக் கொள்வதற்கான, முயற்சிகளில் ஈடுபட வேண்டும்''

அண்மைக் காலமாக சிறுபான்மையின சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றன. பள்ளிவாசல்கள், மத ஸ்தானங்கள் தாக்கப்படுவதுடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கும் வகையில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டு வருகின்றன. பெற்றோல் குண்டுகள் வீசப்படுகின்றன. தீயிட்டு எரிக்கப்படுகின்றன.

இவை தொடர்பாக சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டுமென முஸ்லிம் மீடியா போரம் வலியுறுத்துகிறது. இது தொடர்பில் போரத்தின் தலைவர் என். எம். அமீன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது :-

பொலிஸாரும் அரசாங்கமும் அவசரமாக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இனக் கலவரத்தை ஏற்படுத்தி நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதே இத்தகைய தாக்குதல்களை நடத்துவோரின் நோக்கமாகும். முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி பிரச்சினையை பெரிதாக்குவதற்கே அவர்கள் முனைகின்றனர். திட்டமிட்டு சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரழமான் காலத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முஸ்லிம்களை சீண்டிப் பார்க்கும் முயற்சியிலும் ஈடுபடலாம்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் நிலைமையை மிகவும் கவனமாக கையள்வது அவசியம். குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஆவேசமடைந்து அவர்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாக நாம் இருகக் கூடாது.

எமது சகோதரர்கள் அற்பமாகக் கருதும் சில தவறுகளால் ஆபத்தான பல விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சட்டமும் நீதியும் வலுவிழந்து இனவாதம் கூர்மைப்படுத்தப்படுகின்ற ஒரு  சூழலில் நாம் எம்மைக் காத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எமது நடவடிக்கைகளால் வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படலாம் என்பதை எப்போதும் நாம் மனதிற் கொள் வேண்டும்.

எமது சமூகத்தின் நலனையும் நாட்டின் பொது நலனையும் கருத்திற் கொண்டு நாம் மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.

எமது உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை சட்ட ரீதியாக அணுகுவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். தற்பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். அவ்வாறே மாற்றுமத சகோதரர்களின்உரிமைகள் விடயத்திலும் நாம் சங்கடங்களை உருவாக்காது சமயோசிதத்துடன் நடந்து கொள்வதும் எமது பொறுப்பாகும்.

முஸ்லிம்  ஊர்களது பொறுப்பாளர்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள் இது குறித்த விழிப்பூட்டலை மக்களுக்கு விடுக்க வேண்டும். குறிப்பாக இரவுகளில் எமது பெண்கள் வீதிக்கு வருவதை தவிர்ப்பது நல்லது. அத்துடன்வீதியோரங்களில் நின்று கொண்டிருக்கும் வாலிபர்கள் சமூக நலன் கருதி தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் அநாவசியமான விடயங்களை பகிர்வது, ஏசுவது, திட்டுவது, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது, ஏளனப்படுத்துவது முதலான விடயங்களிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும்.

தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் எமது சமூகம் இழப்புகளையே சம்பாதிக்கும். எனவே! இத்தகைய விடயங்களில் ஊர் மற்றும்பள்ளிவாசல் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இறைவனே பாதுகாப்பவன். அவனிடம் இரு கரமேந்தி பிரார்த்தித்து நோன்பு நமக்கு அளிக்கும் மகத்தான பயிற்சியான பொறுமையை கைக்கொண்டு பின்விளைவுகள் பற்றி சிந்தித்து நிதானமாக நடந்து கொள்வோமாக!


என்.எம். அமீன்
தலைவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்

No comments

Powered by Blogger.