June 02, 2017

இப்தார் நிதிகளை, அனர்த்த நிவாரனங்களுக்காக செலவிடுவோம்

-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

சோதனைகள் வரும் பொழுது பதிக்கப்படாதவ்ர்களே அல்லாஹ்வால் பெரிதும் சோதிக்கப் படுகின்றார்கள். இப்தார் நிகழ்வுகளுக்கான நிதிகளை அனர்த்த நிவாரனங்ககளுக்காக செலவிடுவதன் அவசியத்தை உலமாக்கள் புத்திஜீவிகள் வசதி படைத்தோருக்கும் பொது மக்களுக்கும் அறிவுறுத்துதல் வேண்டும், குறிப்பாக இன்றைய ஜும்மா குத்பாவில் அனர்த்த நிவாரணப் பணிகள் சேவைகளில் உள்ள நன்மைகளை மகத்துவங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுதல் காலத்தின் கட்டாயமாகும்.
உடனடி நிவாரணங்களை விடவும் அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதும், புனர்வாழ்வு அளிப்பதுவும், மீள் கட்டுமானம் செய்வதுவுமே மிகப்பெரிய சவால்களாகும்,
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் இப்தாரும் சஹரும் இருப்பிடங்களுமின்றி நிர்கதியாகியுள்ள உறவுகளின் நிலை கண்டும் இப்தார் விழாக்கள் செய்வோர் நிச்சயமாக இஸ்லாமிய கடமையை செய்யவில்லை வேறு ஏதோ நூதன அனுஷ்டானம்  ஒன்றையே கொண்டாடுகின்றார்கள். 
களநிலவரங்களை கண்டுகொள்ளாமல் நடாத்தப்படுகின்ற அவ்வாறான இப்தார் நிகழ்வுகளை பகிஷ்கரித்தல் மூலம் அவற்றை ஏற்பாடு செய்வோருக்கு ஒரு பலமான செய்தியை சொல்ல வேண்டும்.
 "விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை."

"ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. " (ஸுரதுல் 7: 31 அஃராஃப்)
நோன்பின் மாண்புகள் பேணி எளிமையான இப்தார்களை செய்வோம்! நூதனமான வைபவங்கள் வேண்டாம்.
ஒரு ரோல்ல்ஸ் 25 ரூபாய்
ஒரு பட்டீஸ் 25 ரூபாய்
ஒரு கட்லட் 25 ரூபாய்
ஒரு கேக் துண்டு 30 ரூபாய்
ஒரு பழம் 25 ரூபாய்
ஒரு ட்ரிங்க்ஸ் 40 ரூபாய்
ஒரு போத்தல் நீர் 50 ரூபாய்
ஒரு கஞ்சி 50 ரூபாய்
ஒரு இடியப்ப புரியாணி 200 ரூபாய்
குறைந்த பட்சம் ஒரு இப்தாரிற்கு 500 ரூபாய் செலவாகிறது, குறைந்தது 200 பேர்கள் என்றால் சுமார் ஒரு இலட்சம் ரூபாய்கள் அத்தோடு வரவேற்பு மண்டபத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்கள் என்றால் Rs 150,000 ரூபாய்கள், சில மண்டபங்களில் ஆளுக்கு 750, 1000, 1500, 2000 என அறவிடப்படுகின்றது.
உண்மையில் “இப்தாருஸ் ஸாயிம்” அதாவது தேவையுடையோரை ஏழை எளியோரை நோன்பு திறக்கச் செய்கின்ற இஸ்லாமிய வரையறைகள் பேணிய இதார்களா இன்று இடம் பெறுகின்றன என்பதில் சந்தேகம் இருக்கிறது.
ஆடம்பரமான வைபவங்களாக கொண்டாடப்படும் ஒன்று கூடல்களாக புதிய இப்தார் கலாச்சாரம் உருவாக்கி வருகிறது, பெரும்பாலான இடங்களில் மஸ்ஜிதுகளிலும் மண்டபங்களிலும் ஆண்களுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற இப்தார் வைபவங்கள் எளிய குடும்பங்களில் வாழும், பெண்கள், சிறார்கள் வயோதிபர்களை புறக்கணித்து தான் இடம்பெறுகின்றன.
மேற்படி மில்லியன்கணக்கில் இப்தார் நிகழ்வுகளுக்காக செலவிடப்படும் தொகைகளை உரிய முறையில் மஸ்ஜிதுகளூடாக சேமித்து தேவையுடைய ஏழை எளியவர் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளாக கொடுத்தால் அந்த தொகையால் ஒரு குடும்பமே சஹரும் செய்து இப்தாரும் செய்து பெருநாளும் கொண்டாடுவார்கள்.
ஏழை எளியவர் பிரயாணத்தில் இருப்பவர்களுக்காக எளிமையாக கஞ்சி பேரீந்து மற்றும் சிற்றுண்டிகளுடன் செய்யப்படும் இப்தார்களை மஸ்ஜிதுகளில் மாத்திரம் செய்வதே முறையானது.
சில அமைப்புக்கள் ( சில -வயிறு அல்ல- கட்சி மற்றும் இயக்கம் வளர்ப்போர்) தமது தொண்டர்களை வைத்தே தங்களுக்குள் பெரும்பாலான இப்தார்களை செய்கிறார்கள், இப்தாருக்காக கிடைக்கப் பெறும் நிதி ஏழை எளிய மக்களுக்காகவே ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு பெறப்படுகின்றது.
சமாதான சகவாழ்வு இப்தார் என அளவிற்கு மீறி பாடசாலைகள், மண்டபங்கள் பலகலைக் கழகங்களில், பிற மத தளங்களில் மேற்கொள்ளப்படும் இப்தார்களும் இன்று இலக்குகள் தவறி மேற்கொள்ளப்படுவதாகவே உணர முடிகிறது எனபது எனது தனிப்பட்ட அவதானம்.
நோன்பு மற்றும் இப்தார் பற்றிய பிழையான செய்திகளையே நாம் செயல் வடிவில் உண்டு களித்து பிரச்சாரம் செய்கிறோமா என்று உள்ளம் உறுத்துகிறது. பெரும்பாலான இப்தார் நிகழ்வுகளால் சமூக ஊடகங்கள் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன.
நோன்பு திறக்கும் நேரமானால் விஷேட வைபவங்களுக்கு தயாராவது போன்று நகர்ப்புறங்களில் எல்லோரும் கிளம்பி விடுகின்றார்கள், பாதைகளில் வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன, மண்டபங்களில் ஆரவாரங்களும் ஆடம்பரங்களுமாக வைபவங்கள் இடம் பெறுகின்றன, முஸ்லிம் சமூகம் இன்னும் பொறுப்பாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் இப்தாரும் சஹரும் இருப்பிடங்களுமின்றி நிர்கதியாகியுள்ள உறவுகளின் நிலை கண்டும் இப்தார் விழாக்கள் செய்வோர் நிச்சயமாக இஸ்லாமிய கடமையை செய்யவில்லை வேறு ஏதோ ஒன்றை கொண்டாடுகின்றார்கள் என்றே கூறல் வேண்டும்.

1 கருத்துரைகள்:

Post a Comment