Header Ads



கத்தார் ஏர்வேஸின் உரிமம், சவூதி அரேபியாவினால் ரத்து


கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் சவூதி அரேபியாவில் செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை அந்நாடு செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்தது.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சவூதியிலிருந்து செயல்பட வழங்கிய உரிமத்தை ரத்து செய்வதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. சவூதியில் செயல்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் மூடுமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கத்தார் அரசுக்கு சொந்தமானதாகும்.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, சவூதியின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலிருந்து புறப்பட வேண்டிய கத்தார் ஏர்வேஸ் விமான சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏராளமான விமானங்கள் இயக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு வெளியானது. மாற்று ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், அந்த விமான நிலையங்களில் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.

சவூதியின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து அந்த நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளின் பிற இடங்களிலும் விமானங்களை இயக்குவதில் குழப்பம் நீடித்தது. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் முக்கிய வளைகுடா பிராந்திய விமானப் போக்குவரத்தின் முக்கிய மையாக உள்ளது.

No comments

Powered by Blogger.