Header Ads



குற்றவாளிகளை பாதுகாக்கும் மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

குற்றம் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். அது மாத்திரமல்லாமல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் இல்லை என்பதற்காக ஏனைய இரு அமைச்சர்களும் தப்பித்து விட முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று(14) நடைபெற்ற வடமாகாண சபையின் விசேட அமர்வின் போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் நாளை மதியத்திற்குள் பதவி விலக வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் கூறியிருப்பது தொடர்பில் கருத்துக் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றி விவாதிப்பதற்காக இன்று வடமாகாண சபை கூடிய போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு வடமாகாண முதலமைச்சர் கோரியுள்ளார்.

அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரு அமைச்சர்கள் மீதான விசாரணை தொடருமெனவும் கூறியிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள். அந்தவகையில் வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குற்றவாளிகளையும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளோரையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்கள் செயற்பட்டு வருவது மிகவும் அநாகரிகமானது.

குறிப்பாக ஊழல் வாதிகளைத் தொடர்ந்தும் அமைச்சர்களாக நீடிக்க வலியுறுத்துவதும், ஊழலற்ற அமைச்சரவைக்காக முன்னின்று செயற்படும் வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பதும் அநீதியானது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதற்காக இவர்களைப் பாதுகாக்க முனைவது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.