Header Ads



ரமலான் மாதத்தில் இந்நிலை ஏற்பட்டது குறித்து, பெரும் கவலை அடைகிறோம் - துருக்கி

கட்டார் மற்றும் சவூதி அரேபியா உட்பட அண்டைய வளைகுடா நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர முறுகலுக்கு தீர்வுகாணும் முயற்சியாக துருக்கி வெளியுறவு அமைச்சர் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறுகிய விஜயமாக கட்டார் சென்ற அவர் தற்போது குவைட்டை சென்றடைந்துள்ளார்.

கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய மவ்லுத் கவுசொக்லு, அனைத்து தரப்புகளும் அமைதியான முறையிலும் பேச்சுவார்த்தை ஊடாகவும் தமது பிளவுகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தீவிரவாதத்திற்கு உதவுவதாகவும் ஈரானுடன் நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன மற்றும் மேலும் பல நாடுகள் கடந்த வாரம் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தன.

கட்டாரின் ஒரே தரைவழி எல்லையான சவூதி எல்லை மூடப்பட்டதோடு கட்டாருக்கு சொந்தமான விமானங்களுக்கு சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் தனது வான்பரப்பையும் மூடியது. இது கட்டாரின் இறக்குமதிகள் மற்றும் போக்குவரத்தில் தடங்கலை எற்படுத்தியுள்ளது.

கவுசொக்லு தனது குறுகிய கால விஜயத்தில் கட்டார் எமீர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல் தானி, கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷெய்க் அஹமது பின் ஜெஸ்ஸிம் அல்தானி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கட்டார் மற்றும் அதன் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் மூன்று உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை தீர்ப்பதில் துருக்கி பெரும் முயற்சியில் ஈடுபடுகிறது என்று கவுசொக்லு குறிப்பிட்டார்.

“எமது சகோதரர்களான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸில் நாடுகளுக்கு இடையில் எந்த ஒரு வேறுபாட்டையும் நாம் பார்க்க விரும்பவில்லை” என்று கட்டார் செய்தி நிறுவனத்திடம் அவர் குறிப்பிட்டார்.

துருக்கி அரசுக்கு சொந்தமான அனடொலு செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய பிறிதொரு அறிவிப்பில், “ரமலான் மாதத்தில் இந்த நிலை ஏற்பட்டிருப்பது குறித்து நாம் பெரும் கவலை அடைகிறோம். சகோதர நாடுகளுக்கு இடையில் இவ்வாறான பிரச்சினை ஏற்படும்போது பொதுமக்களே நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அமைதியான மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நாம் தீர்வுகாண வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினையில் துருக்கி வழங்கும் ஆதரவுக்கு கட்டார் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கட்டார் மற்றும் குவைட் விஜயத்திற்கு பின் தான் சவூதி அரேபியா சென்று மன்னர் சல்மானை சந்திக்க எதிர்பார்த்திருப்பதாக கவுசொக்லு தனது வளைகுடா விஜயத்திற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே இந்த இராஜதந்திர முறுகலுக்கு தீர்வுகாண குவைட் எமீர் ஷெய்க் அல் காலித் அல் சபாஹ் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் குவைட் எமீரை கவுசொக்லு நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

1 comment:

  1. யாஅல்லாஹ் இவரின் முயற்சிக்கான பயனை கொடுப்பாயாக.

    ReplyDelete

Powered by Blogger.