June 16, 2017

கத்தாரில் என்ன நடக்குது..?

-Marx Anthonisamy-

கத்தார் மீது சவூதிக்கு பல எரிச்சல்கள். ஈரான் மற்றும் 'முஸ்லிம் பிரதர்ஹூட்' ஆகியவற்றுடன் 
கத்தார் நெருக்கமாக இருப்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. உலகிலேயே மிக அதிக அளவில் திரவ எரிவாயுவைக் கொண்ட நாடாக இருப்பது, அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்வதில் தனக்குப் போட்டியாக இருப்பது, கத்தாரின் அல்ஜசீரா செய்தி நிறுவனம், கத்தாருக்கும் ரஷ்யாவுக்கும் இருக்கும் நெருக்கம்... இப்படிப் பலப் பல எரிச்சல்கள். ஈரானின் புதிய பிரதமர் ரவ்ஹானிக்கு கத்தாரின் எமிர் வாழ்த்துத் தெரிவித்தது சவூதிக்குத் தாங்க மிடில. ஒரு பாடம் கற்பித்தே ஆகணும்னு துடித்தது. ஏற்கனவே 2014லும் இப்படி ஒரு தடை விதித்த அனுபவம் வேறு சவுதியை அந்தத் திசையில் விரட்டியது.

இதன் விளைவே ஜூன் 5 அன்று கத்தார் மீது விதிக்கப்பட்ட தடை. உடனே ஐக்கிய அரபு எமிரேட்களும் சவூதியுடன் சேர்ந்து கொண்டன. கிட்டத்தட்ட கத்தார் முற்றுகை இடப்பட்ட து எனலாம். போதாக்குறைக்கு சவூதியின் எஜமானான அமெரிக்காவின் ட்ரம்ப்பும் சற்று முன்தான் சவூதிக்கு வருகை தந்து புன்னகைத்திருந்தார். போதாதா?

அடுத்த நாள் (ஜூன் 6) சவூதி கத்தாருக்கு 24 மணி நேர அவகாசம் கொடுத்துத் தன் கோரிக்கைகளுக்குப் பணிய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் இராணுவ நடவடிக்கை எனவும் மிரட்டியது.

ஆனால் சின்னஞ்சிறு கத்தார் கலங்கவில்லை. ஆறு நாட்களுக்குப் பின் கத்தாரின் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, "எங்களுக்கான உணவு வரத்து வழியில் 16% தான் தடை விதித்துள்ள நாடுகளில் அமைந்துள்ளது. நாங்கள் சமாளிப்போம். எங்களின் சுதந்திரமான அயல் நாட்டுக் கொள்கையில் யாரும் தலையிட அனுமதியோம்" என அலட்சியமாகப் பதிலளித்தார். தாக்குதல் என்றால் தயாராக இருக்குமாறு கத்தார் தன் இராணுவத்தையும் முடுக்கியது.

ஜூன் 7 அன்று உணவு அனுப்புமாறு துருக்கியை கத்தார் கேட்டுக் கொண்டது. காத்திருந்த துருக்கி விமானங்கள் உடன் உணவுப் பொருட்களுடன் கத்தாரை நோக்கிப் பறந்தன. துருக்கியும் கத்தார் போலவே முஸ்லிம் பிரதர்ஹூட் ஆதரவு நாடு என்பது குறிப்பிடத் தக்கது. ருஷ்யாவும் சும்மா இருக்கவில்லை. கத்தார் கேட்டுக் கொண்டால் தாங்களும் உணவு அனுப்பத் தயார் என்றது.

இதற்கிடையில் பென்டகான் இந்த விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையைக் கடைபிடிக்குமாறு ட்ரம்பை எச்சரித்தது. வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய விமான தளம் கத்தாரில் அல்லவா உள்ளது. CENTCOM இன் தலைமையகம் கத்தார்தான்., 10,000 அமெரிக்க வீரர்கள் அங்கு உள்ளனர். இதெல்லாம் நினைவூட்டப்பட்டவுடன் ட்ரம்ப் தன் நிலையை மாற்றிக் கொண்டார். கத்தார் மீதான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்காது என்றார், கத்தார், சவூதி இரண்டுமே எனக்கு நட்பு நாடுகள் அல்லவா எனச் சொல்லி மறுபடியும் புன்னகைத்தார்.

இதற்கிடையில்தான் ஜூன் 7 அன்று ஈரான் நாடாளுமன்றம் மட்டுமல்ல ஆயத்துல்லா கோமேனியின் நினைவிடமும் தாக்கப்பட்டன. இது சவூதியின் வேலை எனச் சொன்ன ஈரான் கத்தாருக்கு இன்னும் நெருக்கமாகியது. ஏதாவது பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டுமா கவலையே வேண்டாம் எங்கள் நாட்டில் மூன்று துறைமுகங்களை உங்களுக்குத் திறந்து விடுகிறோம் எனக் கத்தாருக்கு வாக்களித்த ஈரான் தனது விமான தளங்களையும் அது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றது.

துருக்கி உணவு அனுப்பியதோடு நிறுத்தவில்லை. கத்தாருக்குத் துருப்புகளை அனுப்பவும் தயாரானது. 2016ல் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் ஏற்கனவே கத்தாரில்  துருக்கியின் 150 வீரர்கள் உள்ளனர்.

கத்தாரின் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி புடினுடன் பேசினார். தமது அயலுறவு அமைச்சரை பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோவுக்கு அனுப்புவதாகவும் கூறினார். புடின் ஏற்றுக் கொண்டார். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைச் சமாளிப்பதே நல்லது என்றார்.

எதையும் உறுதியாக இப்போது சொல்ல இயலவில்லை. தன் நடவடிக்கை அப்படி ஒன்றும் புத்திசாலித்தனமானது இல்லை என்பதை சவூதி ஓரளவு புரிந்துள்ளது என நம்பலாம். ஏற்கனவே ஏமன் மீதான தாக்குதலிலும் சவூதிக்கு நல்ல பெயர் இல்லை. சிரியாவில் அதன் தலையீடுகளிலும் இனி அது கொஞ்சம் பின்னடைவுகளைச் சந்திப்[பது தவிர்க்க இயலாது.

4 கருத்துரைகள்:

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த் போதனையோ தீயிலே இறங்கிவிட்டார் திரும்ப வந்து கால் படிவார்.

கத்தார், ஸவூதி என்றல்ல, எல்லா முஸ்லிம் அரபு நாடுகளும் ஒரே உம்மத் என்ற அடிப்படையில் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு நாடும் ராஜதந்திர ரீதியாக வேறுபட்ட அணுகுமுறைகளை கடைப்பிடித்தாலும் இஸ்லாத்தை பொது எதிரியாக ஏனையவர்கள் பார்ப்பதால் மிகவிரைவாக இணைந்து செல்லவேண்டும்.
துருக்கி மற்றும் குவைத் ஆகியவற்றின் சமரச முயற்சி வெற்றியளிக்க ரமளானின் இறுதிப் பத்தில் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

துருக்கி தேவையில்லாமல் ஏன் இதில் மூக்கை நுழைக்குது?

சதாம், கடாபி நிலை தான் ஏர்துக்கானுக்கும் வரும் போல.

جزاكم الله خيرا

Post a Comment