June 16, 2017

வடக்கு அரசியல் குழப்பம் தீரவில்லை, விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கில் ஹர்த்தால்

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை என்றும், இன்று காலையும் இதுதொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க முடிவு செய்த விவகாரத்தை அடுத்து, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் கையளித்திருந்தனர்.

எனினும், இந்த விவகாரத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

நேற்றுக்காலை முதலமைச்சருடன் சுமார் ஒரு மணிநேரம் தொலைபேசி மூலம் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன் போது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு, சில உறுதிமொழிகளை வழங்கினால் அந்த முடிவை மாற்றிக் கொள்ளத் தாயராக இருப்பதாக முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

எனினும், புதிய அமைச்சர்களை நியமிப்பது உள்ளிட்ட விடயங்களில் இழுபறிகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இரா.சம்பந்தன் சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போதும், தமிழ் அரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டிலேயே இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், வடக்கு மாகாணசபை விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்றும், மாகாணசபை உறுப்பினர்களே முடிவுகளை எடுப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

அதேவேளை, இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இன்று காலை அவர் மீண்டும் பேச்சுக்களை நடத்துவார் என்றும் அதன் பின்னரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்படுமா என்று முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நேற்றுமுன்தினம் வடக்கு மாகாண அரசியலில் தோன்றிய குழப்பநிலை இன்றும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment