June 20, 2017

அகதிகளில் அதிகம் முஸ்லிம்களே, அடைக்கலம் கொடுப்பதிலும் முஸ்லிம் நாடுகள் முதலிடம்

அகதிகள், அடைக்கலம் கோருவோர் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 65.6 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா அகதிகள் அமைப்பின் ஆண்டறிக்கையில் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் எடுத்த இந்த கணக்கெடுப்பின்படி, இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டை விட 3 லட்சம் அதிகமாகியிருக்கிறது.

2014-15ஆம் ஆண்டில் ஐந்து மில்லியன் பேர் இடம்பெயர்ந்திருந்ததுடன் ஒப்பிடும்போது இது குறைவான அதிகரிப்பு தான்.

என்றாலும், இது சர்வதேச இராஜதந்திரத்தின் அதிர்ச்சியூட்டும் தோல்வி என்று ஐ.நா அகதிகள் முகமையின் உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி, என்று கூறினார்.

"உலகத்தில் சமாதானத்தை உருவாக்க முடியவில்லை" என்று பிலிப்போ கிராண்டி கூறுகிறார்.

"எனவே, பழைய முரண்பாடுகள் தொடர்வதையும், புதிய மோதல்கள் வெடிப்பதையும் பார்க்கமுடியும், இவையே இடம் பெயர்தலுக்கான காரணமாகிறது. கட்டாயமான இடம்பெயர்வு என்பது, முடிவடையா போர்களுக்கான ஓர் அடையாளம்" என்றார் அவர்.

உலகின் மிகப்பெரிய அகதி குடியேற்றங்களில் ஒன்றாக பிடிபிடி கிராமம் மாறியுள்ளது. 2016 ஆம் ஆண்டில், தெற்கு சூடானில் ஏற்பட்ட வன்முறையால், கிட்டத்தட்ட 340,000 மக்கள், அங்கிருந்து வெளியேறி, அண்டை நாடான உகாண்டாவிற்கு சென்றார்கள்.

இது அகதிகள் வெளியேறுவதில் மிகவும் அதிகமான எண்ணிக்கை ஆகும். போரினால் மக்கள் அதிகமாக வெளியேறும் சிரியாவை விட இது அதிகம். சிரியாவில் இருந்து 2 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது.

36 மணி நேரங்கள் பயணித்து, இரு நாடுகளின் எல்லையை ஒரு சாதாரண மரப் பாலம் மூலம் கடந்தால், அகதிகளுக்கு சிறிதளவு நிலம் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களுக்கான உணவை தயாரிக்க தேவைப்படும் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

ஓராண்டுக்கு முன்பு சாதாரணமாக இருந்த பிடி பிடி கிராமம், இப்போது மிகப்பெரிய அகதிகள் குடியேற்றங்களில் ஒன்றாக மாறிவிட்டது. சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு இருப்பிடமாக திகழும் இந்த கிராமம், 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கிறது.

இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது , தற்போது மிக அதிகமாக பதிவாகியிருப்பதைக் குறித்து செல்வந்த நாடுகள் ஆலோசிக்கவேண்டும், அகதிகளை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, அமைதியை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு செலவிடுவது, மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் அவை சிந்திக்கவேண்டும் என்று ஐ.நா கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், உலகின் மிக ஏழை நாடுகளுக்கு அகதிகளால் ஏற்படும் மிகையான சுமைகள் குறித்தும் கிராண்டி எச்சரிக்கிறார். ஏனெனில், இடம்பெயரும் 84% மக்கள், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர்.

"செல்வந்த நாடுகள் அகதிகளை ஏற்க மறுத்தால், மில்லியன் கணக்கான அகதிகளுக்கு புகலிடம் கொடுக்குமாறு வளம் குறைந்த ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் எப்படி கேட்க முடியும்?" என்று கிராண்டி கேள்வி எழுப்புகிறார்.

உலக அளவில் 65.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், இது இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட அதிகம். இந்த எண்ணிக்கையில்:

• 22.5 மில்லியன் அகதிகள்
• 40.3 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள்
• 2.8 மில்லியன் மக்கள் தஞ்சம் கோருகின்றனர்
அகதிகள் எங்கிருந்து வருகிறார்கள்?

• சிரியா: 5.5 மில்லியன்*
• ஆப்கானிஸ்தான்: 2.5 மில்லியன்
• தெற்கு சூடான்: 1.4 மில்லியன்
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்
 துருக்கி: 2.9 மில்லியன்
 பாகிஸ்தான்: 1.4 மில்லியன்
 லெபனான்: 1 மில்லியன்
 இரான்: 979,4000
 உகாண்டா: 940,800
 எத்தியோப்பியா: 791,600
*வேறு 6.3 மில்லியன் பேர், சிரியாவிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment