Header Ads



மகிழ்ச்சியான பெருநாளாக அமையட்டும் - ரணில் வாழ்த்து

உலகம் முழுவதுமுள்ள சகோதர முஸ்லிம்கள் சகோதரத்துவம், சமத்துவம், சகவாழ்வு ஆகிய உயரிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நோன்புப் பெருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு மாதம் முழுவதும் உணவின்றி நோன்பு நோற்று ரமழானைக் கழிக்கும் முஸ்லிம்கள் தமது சகோதர மக்களின் துன்ப துயரங்கள், தேவைகளை உணர்வுபூர்வமாக அணுகி, உதவிகள் வழங்கப்பட வேண்டிய மக்களுக்கு தியாக உணர்வுடன் உதவியளித்து சகோதரத்துவம், சகவாழ்வினைக் கட்டியெழுப்ப ரமழான் மாதத்தில் விசேட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறே இந்த நோன்பு காலத்தில் தனிப்பட்ட ரீதியிலும், சமூக ரீதியாகவும் வளர்த்துக் கொள்ளும் உடல், உள அமைதித்தன்மை, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றை மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்வது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பினை யதார்த்தமாக மாற்றிக் கொள்வதற்கு இந்த நோன்பு காலத்தில் உடல் மற்றும் உள ரீதியாக நாம் வளர்த்துக் கொள்ளும் பெறுமானங்களை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பத்திலும் பேணிக் கொள்ள வேண்டும்.

இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து சகோதர முஸ்லிம்களுக்கும்; சமாதானம், நல்லிணக்கம் மிகுந்த மகிழ்ச்சியான நோன்புப் பெருநாளாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

ரணில் விக்கிரமசிங்க 
பிரதம அமைச்சர்

No comments

Powered by Blogger.