June 13, 2017

உம்மாவா..? ஊறிப்போன கொள்கைவாதமா..??

"நீ எங்களுடன் உள்ளாயா இல்லையா ? .."

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் பயங்கரவாதத்துக்கு  எதிரான போராட்டத்தின் பிரபல அந்த கேள்விதான் இங்கு ஞாபகம் வருகின்றது .

கட்டாருக்கு எதிராக நேச நாடுகளை திரட்டும் மும்முரமான பணியில் சவூதி ,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ,பஹ்ரைன் ,எகிப்து ஆகியன தீவிரமாக இறங்கியுள்ளன .

இதுவரை ஜோர்தான் ,எரித்திரியா ,சார்ட் , மௌரிட்டானியா ,மாலைதீவுகள் , கூட்டணியில் சேர்ந்துள்ளன . சகோதரத்துவம் பேசிக்கொண்டிருந்த பாகிஸ்தான் நவாஸ் ஷெரீபின் சவூதி விஜயத்துக்கு பின்னர் ஆட்டம் கண்டுள்ளது

கட்டார் நெருக்கடியில் பக்கம் சேர்க்கபணமும் செல்வாக்கும் அள்ளி வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.   நமக்குள் உள்ள கொள்கை வாதத்தை சியோனிஸம் கட்சிதமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

சகோதர நாடு ஒன்றை ,எதிரி நாடு ஒன்றை நடத்துவதை விட கேவலமான முறையில் அரபு கூட்டணிகள் நடத்திக்கொண்டிருக்கின்றன .

ஓரே மொழி.. ஓரே இனம் ..ஒரே கலாசாரம் எல்லாவற்றுக்கும் மேலாக இதயங்களை ஆழமாக இணைத்து ஒட்டை போட்டுத் தைத்துள்ள சகோதரத்துவத்தின் சிகரமாக உள்ள ஓரே மார்க்கம் .

நமது ஷேக்குகள் எங்கே தக்பீர் கட்டுவது என்பதிலும் , இஹ்வான்கள் எதிரிகளா என்பதிலும் ,தாராவியா எத்தனை ரக்கத்துக்கள் தொழலாம் என்பதிலும் மேடை போட்டு பீரங்கி பேச்சுக்களை பேசி ,பின்பற்றுபவர்களிடையே ஜிஹாத் நடத்திக்கொண்டிருக்கிற அதே வேளை, ஷேய்க் டொனால்ட் ட்ரம்பும் , ஷெய்க் ரெக்ஸ் டில்லர்சன்னும் , இமாம் எம்மெனுவேல் மேக்ரோனும் அரபுக்களுக்கு ஒற்றுமை பற்றி மார்க்க வகுப்பு எடுக்கிற கேவலமான நிலைக்கு சென்று விட்டது  நிலைமை.

புனித இஸ்லாத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளுகிற இவர்கள் , சகோதரவத்துவத்தை குழி தோன்றி புதைத்து விட்டார்களா ? அல்லது கொள்கைக்காக  சியோனிசம் தோண்டிய குழிக்குள்ளே வீழ்ந்து விட்டார்களா

என்னதான் இங்கே நடக்கிறது ?

தேவையுற்றோருக்கு தானம் செய்வதில் பேர்போன இந்த புனித ரமழான் மாதத்தில் தன் சகோதரணை , அண்டை வீட்டுக்காரனை இப்படி பட்டிணி போடுவது எந்த வகையில் நியாயம் ?

புனித ரமலான் முடியட்டும் என்று கூட பொறுத்திருக்க கூடாதா ?

இத்தாலியில் இருந்து  உணவுப்பொருட்கள் பெறுகிற  நிலையில் இருக்கின்றது கட்டாரின் நிலைமை .

புனித ஹஜ்ஜுப்பெருநாள் அன்று சதாம் ஹுஸைனை பலிகொடுத்த சியோனிசம் ,புனிதமான நாட்களில் நம்மை தலை வைத்து அமைதியாக தூங்க விட மாட்டார்கள் என்பதை எப்போது இவர்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள் ?

சொந்த பூமிக்காக உறவுகளை இழந்து உடைமைகளை இழந்து உணர்வு போராட்டம் நடத்தும் பலஸ்தீன மக்களை கை விட்டால் பொருளதார தடைகள் நீக்கப்படும் என்கிற அரபு கூட்டணியின் கோரிக்கைகள் ஒவ்வொரு  முஸ்லிம்களின் ஆத்திரங்களை அலைமோத செய்து கொண்டிருக்கிறது .
இதுவரை முஸ்லிம்களுக்கு என்று சர்வதேச மீடியா ஒன்று இல்லை என்று முஸ்லிம்கள் புலம்பிக்கொண்டிருந்த நிலையில் சர்வதேச ரீதியில் தலை நிமிர்ந்துள்ள அல் ஜெஸீராவை  முடக்க  வேண்டும் என்கிற கோரிக்கையை எந்த முஸ்லிம்தான் ஏற்றுக்கொள்ளுவான் ?

அரபுக்கள் ஷியோனிஸ அஜெண்டாக்களுக்கு ஆடுகிறார்கள் என்பது மட்டும் உண்மை என தெரிகிறது . கட்டார் மீதான தடைகளுக்கு முன்னால் எகிப்திய சர்வாதிகாரி  சிசி  இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹுவை கெய்ரோவில் வைத்து இரகசிய சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளமை தொடர்ந்து வருகின்ற கதைக்கு காரணம் கற்பிக்கிறது .

உம்மாவின் அழுகை இன்னமும் ஓயவில்லை . சிரியா அழுகிறது . பர்மா ,காஷ்மீர் ,ஈராக் , பலஸ்தீனம் , ஆப்கானிஸ்தான் என்று அழுகையின் பட்டியல் தொடர்கிற நிலையில் இன்னொரு அவலம் நம் முன்னே நாடகம் போல காட்சி அளிக்கின்றது .இன்னொரு மனித  அவலம் தூரத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை .

இமாம்களே. .மார்க்க அறிஞர்களே .. நமக்குள் இருக்கின்ற சிரிய ஓட்டைகளை ஊதி பெரிதாக்கி பிரிவினைகளை வளர்க்காதீர்கள் . நீங்கள் கற்ற மார்க்க வேஷன்களை, மார்க்க  கல்வி கூடங்களின் போதனைகளை மனசாட்சியை விற்று மக்கள் மத்தியில் திணிக்காதீர்கள் . இன்னொரு இரத்த வெள்ளத்துக்கு காரணமாக அமைந்து விடாதீர்கள் ஆட்சியாளர்களை திருப்தி படுத்த சகோதரத்துவங்களை கூறு போட்டு விற்று விடாதீர்கள்.

நீங்கள்தான் விலை மதிக்க  முடியாத,  பெறுமதி மிக்க ட்ரெண்ட் மேக்கர்கள் . அடுத்த தலைமுறையிலும் பிரிவிணைகளை இரத்தத்துக்குள் புகுத்தி  சந்திகளில் நின்று நமக்குள் மட்டுமே சண்டித்தனம் காட்டுகிற ஒரு கோழை சமுதாயத்தை உருவாக்கி விடாதிர்கள் ...கொள்கை வாதங்களுக்காக இன்னோரு அலப்போவை இன்னொரு மதாயாவை உருவாக்க காரணமாக அமைந்து விடாதீர்கள் . இதை உங்களுக்கு சொல்ல நான் யார்? நான் எந்த மதரஸாவில் படித்தேன் ?என்கிற கேள்வி ஈகோக்களுக்கும் இடம் கொடுத்து விடாதீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அடங்கி போகின்ற மன்னிப்பு கேட்கின்ற கோழை சிங்கங்களை உருவாக்கி விடாதீர்கள் .ஈகோக்களை விட்டெறிந்து உங்களுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளை கழுவி எறியுங்கள் . இல்லாதுபோனால் ஈராக்குகளையும் சிரியாக்களையும் ஒவ்வொரு சொந்த ஊர்களிலும் விரைவில் சந்திக்க வேண்டியிருக்கும் ..

-முஹம்மது ராஜி

0 கருத்துரைகள்:

Post a Comment