Header Ads



ஜனாதிபதி தலைமையில் இரகசிய கூட்டம்

அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பாக பல முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக ஜனாதிபதி தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட இரகசிய கூட்டம் ஒன்று கடந்த திங்கள் கிழமை நடைபெற்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீரவின் கொழும்பில் உள்ள உத்தியோபூர்வ இல்லத்தில் இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை 4 மணிநேரம் நடைபெற்ற இந்த இரகசிய பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு தரப்பினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியுடன் அமைச்சர் மகிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உட்பட 5 அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான இணக்க அரசாங்கத்தை அமைக்க ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை தொடர்பாக இதன் போது பாரதூரமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்கான துறைகளுக்கு உரிய நிறுவனங்களை வழங்கும் போது ஜனாதிபதியின் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என இதன் போது கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அரச திணைக்களங்கள் உட்பட மேலும் பல அரச நிறுவனங்கள் அமைச்சுக்கான துறைகளில் இருந்து நீக்கப்படலாம் என பேசப்படுகிறது.

இதனை தவிர உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று மாதங்களுக்குள் நடத்துவது, மாகாண சபைத் தேர்தலை தொகுதி முறையில் நடத்துவது உட்பட அரச நிர்வாகம் சம்பந்தமாக வெளியிடப்படாத பல முக்கிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.