Header Ads



தேவையா இந்த இப்தார்..?

-அபூ நூறா-

ஆதமுடைய மக்களே!... உண்ணுங்கள், பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31) 

"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்" என்று கூறினார்கள். (திர்மிதி)

அன்பிற்கினிய சகோதரர்களே, ரமலான் மாதம் என வந்துவிட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரீதியிலான இலாபங்களை அடைய முயற்ச்சி செய்வதுண்டு. குறிப்பாக வியாபாரிகள் தங்கள் வியாபரத்தை அதிகப்படுத்துவதிலும், அரசியல்வாதிகள் அதுவரை காணாமலிருந்த தம்மை கட்சித்தலைவர்களிடம் அறிமுகம் செய்தும் அவர்களை மகிழ்விப்பதற்கும் களமிறங்கும் நிகழ்வை பார்க்கின்றோம்.

இவ்விருவரில் வியாபாரியைப் பொறுத்தவரையில் அவருடைய வியாபாரம் ஹலாலாக இருந்தால் ரமலான் மாதம் எனும் கணக்கின் அடிப்படையில் அவருடைய வியாபாரத்தில் பல்லாயிரம் மடங்கு அபிவிருத்தியை இறைவன் அளிப்பான் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் அரசியல்வாதிகளின் செயல்களுக்கு...? அவர்களுக்கு தங்கள் அடையாளமும் பதவி மோகமும்தான் பெரிதாக இருக்கின்றது! குறிப்பாக முஸ்லிம் கட்சிக்காரர்கள்....

இவர்கள் எதற்காக அரசியலில் குதித்தார்கள்? முதலில் தம் சமுதாயம் சீரடையவேண்டும். பிறகு தம்மால் இயன்றவரை அடுத்தவர்களுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். ஆனால் நம்மவர்களால் இதையும் செய்ய முடியாது, அதையும் செய்ய முடியாது! அவர்களுக்கு முடிந்தது எல்லாம் ஆட்சியாளர்களை மகிழ்விப்பது, அவர் புகழ்பாடுவதுதான் முக்கிய குறிக்கோளாக உள்ளது!

அடுத்த தேர்தலில் தமக்கு கிடைக்க வேண்டியவை, தமக்கு கிடைத்திருப்பதில் குறை வந்துவிடக்கூடாது, குறை வரும் நிலையில் நாம் நடந்துவிடக்கூடாது போன்ற எண்ணங்கள் தவிர அல்லோலப்படும் சமுதாயம் என்ற உணர்வு இவர்களுக்கு இருக்கின்றதா?

வேறெந்த சமுதாயத்தினரைவிடவும் முஸ்லிம் சமுதாயத்தவர்கள்தான் கையேந்தும் செயலில் முன்னணியில் உள்ளனர். குறிப்பாக நோன்பு என்று வந்துவிட்டால் அவர்களில் பலர் படைதிரண்டு வருவதைப் பார்க்கின்றோம்.

ஜகாத் என்ற பெயரைச் சொல்லி கிடைக்கும் 50 - 100 காசுகளுக்காக காலை முதல் மாலை வரை அலைந்து திரியும் இவர்களில் சிலர் நோன்பு வைக்காதவர்களும் உள்ளனர், சிலர் கஞ்சா போன்ற போதைபொருளை உட்கொண்டு நடப்பதையும் மறுக்க இயலாது.

பசித்திருக்கும் தம் முஃமின்களான சகோதரர்கள் பல்லாயிரம் பேர் இருக்கும்போது அவர்களுக்கு செலவிடவேண்டிய பொருளாதாரத்தை ஒரு சில காஃபிர் தலைவர்களை அழைத்து விரயம் செய்வது எப்படி மனம் வருகின்றதோ தெரியவில்லை!

நாளை மறுமையில் நாம் பெற்ற ஒவ்வொன்றையும் குறித்த கேள்விகள் எழும் என்ற பயம் இருந்தால் நம் இரத்த பந்தத்தை ஒதக்கிவிட்டு அரசியல் இலாபங்களுக்காக இணை வைப்பவர்களையும், நிராகரிப்பாளர்களையும் நோன்பு திறக்கச்செய்து மகிழ்வித்தால் இறைவன் சும்மா விட்டு விடுவானா?

எவனொருவன் அணு அளவு நன்மை அல்லது தீமை செய்தால் அதற்கு உரிய பரிகாரம் கிடைக்காமல் இருக்காது என்று இறைவன் கூறியுள்ளான். ஆனால் நம்மவர்கள் செய்வது அணு அளவிலான தீமையா? அல்லது அணு குண்டு ஏற்படுத்தும் அளவிலான தீமையா என்பதை உணராமல் செயல்படுவதை என்னவென்று சொல்ல?

முஸ்லிம் ஏழைகளுக்கு இவர்களால் வழங்கவேண்டிய தேவையில்லை என்று விட்டுவிடுவோம். சும்மா இரந்துவிடலாம்தானே? எதற்காக காஃபிர்களுக்கு வழங்குகின்றார்கள்? அதுவும் நோன்பு திறப்பு (இஃப்தார்) என்ற ஏமாற்றுப்பெயரில்.....

அரசியல் வாதிகளை மகிழ்விப்பதன் மூலம், இவர்கள் இறைவனை ஏமாற்றுகின்றார்களா? அல்லது பொதுமக்களை ஏமாற்றுகின்றார்களா?

சிலர் ஏமாற்றுதலுக்கு மேல் ஏமாற்றுதல் செய்யும் பதிலைத் தருவார்கள், அதாவது நாங்கள் நோன்பைப் பற்றி அவர்களிடம் எடுத்து கூற இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகின்றோம் என்பர். அதை தமக்குத்தாமே சொல்லி ஏமாந்து கொள்ளட்டும். இறைவன் ஏமாறப்போவதில்லை!

No comments

Powered by Blogger.