Header Ads



என்ன நினைத்துப் போனாயோ நோன்பே!


துவைத்து உலர்த்தப்பட்ட மனங்களுடன் இந்தக் காலையை அடைந்தோம்,
சலவைத்தூளுடன் வந்துபோனது யார்? 
நீதானே நோன்பே,

புதுத்தெம்பும் புத்தாடையுடன் ஈதுல்பித்ர் இல் கூடிக்கலைந்தோம்,
புன்னகைக்கப் பயிற்றுவித்துப் போனது யார்? 
நீதானே நோன்பே,

தானாக வந்தாய், 
எம் இரகசியம் வரை பழகினாய், அனுமதியின்றியே விடைபெற்றாய், 
என்ன நினைத்துப் போனாயோ?

இல்லத்தரிசிகளாய் நாங்கள் சமைத்த பொழுதுகளைச் சபித்துக் கொண்டிருந்தாயோ?
இல்லை, அதுவும் வணக்கம் எனச் சான்றுப்படுத்தி சாட்சியாக நின்றாயோ?

காரியாலயக் கடமையில் திளைத்த எம் பொழுதுகள், 
உன்னை விலகிச் சென்றதாய் உணர்ந்தாயோ?
இல்லை, எம் சேவை பெற்ற பொதுமகனாய் பூரித்தே நகர்ந்தாயோ?

அசதி கொண்டு நாங்கள் தூங்கியபோது, வெப்புசாரப்பட்டுநீ கிடந்தாயோ?
இல்லை, எம் ஒவ்வொரு மூச்சுக்கும் நன்மையள்ளித் தந்தாயோ?

எம் இரகசியம் வரை பழகினாய், 
அனுமதியின்றியே விடைபெற்றாய், என்ன நினைத்துப் போனாயோ?

எமது ஆடைகள் கழுவிச் சுத்தம் செய்தபோது, புள்ளிகள் குறைத்தாயோ?
இல்லை, ஈமானின் பாதி அதுவென்ற நபிமொழி கொண்டு தெளிந்தாயோ?

பாக்கிவைத்து உன்னை நோற்றதற்காய் பெண்கள் நாம் பாக்கியமற்றுப் போனோமோ?
இல்லை, எம் உடல்இயல்பு அதுவென்று கண்டுகொள்ளாதிருந்தாயோ?

யாசித்து வந்தோர்க்கெல்லாம் பாத்திரம் நிறைத்தோம், கைகளையும் நிறைத்தோம்
இல்லை, இல்லை அவர்களின்  மனம் நிறைத்தாயா என்றெம்மைக் கடிந்துகொண்டே போனாயோ?

எம் இரகசியம் வரை பழகினாய், 
அனுமதியின்றியே விடைபெற்றாய், 
என்ன நினைத்துப் போனாயோ?

முழுவதுமாய் மீட்ட எண்ணியும் பாதி புரட்டிய இறைமறை பார்த்து முகம்  சுழித்தாயோ?
இல்லை, இம்முயற்சியே போதுமென திருப்தியோடு போனாயோ?

எம் நோன்பின் பெறுமானம்
பசியும், தாகிப்பும்தான் என்று முடிவுரை எழுதிப் போனாயோ?
இல்லை, ரய்யான் வாசலில் நுழைவோம் என்று விடிவுரை ஒன்று தந்தாயோ?

என்னதான் நினைத்துப் போனாயோ?

விலா உயர்த்திய எம் சஹர்களும் நித்திரை கிழித்த எம் கண்களும் வருத்தப்பட்டே போகுமோ?
இல்லை, நாளை உன் பொருத்தம் பெற்றுத் தந்திடுமோ?

உன்னைக் கட்டிவைத்துப் பின் அவிழ்த்துப் பிடித்த எம் சிறிசுகளின் நிலை பார்த்து உள்ளூரச் சிரித்தாயோ?
இல்லை, சின்னச்சின்ன நன்மைகொண்டு நன்மாராயம் கூறினாயோ?

என்னதான் நினைத்துப் போனாயோ?

எம் ஆன்மா கழுவிட வந்தாய், 
உன்னைச் சிரமமாக நினைத்தோமோ,
நித்தியவாழ்வு கற்றுத் தந்தாய், 
உன்னிடம் நன்றியற்றும் நடந்தோமோ

நீ அரவணைக்க வந்தபோது நாங்கள் மௌனம்காத்து விலகினோமோ
இன்னும் பலவாறாய் உன்னை நோகடித்துமுள்ளோமோ

நோன்பே,
இத்தனையும் நாங்கள் செய்திருந்தும், மீண்டும் மீண்டும் கனிந்து வருவாய், 
எம் இரகசியம் வரை பழகுவாய், 
அனுமதியின்றியே விடைபெறுவாய், 
அப்போதும் என்ன நினைத்துப் போவாயோ?

பர்சானா றியாஸ்

No comments

Powered by Blogger.