Header Ads



சகோதரனின் மாமிசம் இலவசமா..?

குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பல குழப்பங்களுக்கு வித்திடும் பாவங்களில் ஒன்று புறம் பேசுதல். இதுபோன்ற மனித மனம்சார்ந்த பாவங்களைத் தடுக்கவோ சமூகத்தில் பரவாமல் தடுக்கவோ என்ன செய்யலாம் என்று கேட்டால் நாத்திகர்களிடம் இதற்கு பதில் கிடைக்காது. காரணம் அவர்களுக்கு இறைநம்பிக்கையும் கிடையாது.

மரணத்திற்குப்பின் நம் வினைகளுக்கு விசாரணை உண்டு என்ற நம்பிக்கையும் கிடையாது. இந்த அப்பட்டமான உண்மைகளை மறுப்பதனால் சமூக சீர்திருத்தம் என்பதை அவர்களால் வாயளவில் பேசத்தான் முடியுமே தவிர நடைமுறை சாத்தியமான எந்த தீர்வுகளையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவும் முடியாது. மேலும் இதுபோன்ற பாவங்களை சட்டம்போட்டும் தடுத்துவிட முடியாது.

இதுபோன்ற பாவங்களை மனிதமனங்களை சீர்திருத்துவதன் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். திருக்குர்ஆனும் நபிமொழிகளும் பகுத்தறிவு பூர்வமான இறைநம்பிக்கையையும் மறுமை நம்பிக்கையையும் கற்பிப்பதால் இறையச்சம் என்ற பொறுப்புணர்வை மனித மனங்களில் விதைக்கின்றன. இறைவன் தன்னைக் கண்காணிக்கிறான் என்ற உணர்வு விதைக்கப்படுவதால் யாரும் காணாதபோதும் பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து அவை மனிதனைத் தடுக்கின்றன.

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து இறைவனும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு சமாதியிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் நாம் அவசியம் கைவிட வேண்டும்.

புறம் பேசுதல் என்றால் என்ன?

“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்” என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவதுதான் புறம்” என்றார்கள். “நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

புறம்பேசுதல் இறைவன் தடுத்த பாவமாகும்

இறைவன் கூறுகிறான்:- இறைநம்பிக்கையாளர்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

அதாவது புறம் பேசுதலை இறந்துவிட்ட ஒரு சகோதரனின் மாமிசத்தைப் புசிக்கும் கொடுமைக்கு ஒப்பாக்குகிறான் படைத்த இறைவன்!

புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்(சமாதியிலும்) மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -

சமாதியில் கிடைக்கும் தண்டனைகள்

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு சமாதிகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சமாதியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்

1) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்:

“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

2) தங்களைத் தாங்களே கீறிக் கொள்வார்கள் 
-
“மிஃராஜின் (விண்ணேற்றத்தின் போது) நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” (அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்;: அஹ்மது)

(மிஃராஜ் – நபிகளாருக்கு தன் வாழ்நாளிலேயே விண்ணுலகக் காட்சிகளைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட பயணம்.)

பாவபரிகாரம் எவ்வாறு?

இறைவனும் அவனது தூதரும் தடுத்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும். கடந்த காலத்தில் இப்பாவத்தைச் செய்திருந்து அதன் விளைவுகளில் இருந்து மறுமையில் தப்பித்துக்கொள்ள யாரேனும் விரும்பினால் அவர் அதற்கான பரிகாரத்தைத் தேட வேண்டும். அதாவது ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். ஏனெனில் அவர்கள் மன்னிக்காதவரை இறைவன் அப்பாவத்தை மன்னிப்பதில்லை. பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி இறைவனிடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

இறைவன் கூறுகிறான்:

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், இறைவனின் கருணையில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக இறைவன் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்

Quranmalar

No comments

Powered by Blogger.