Header Ads



இரத்தம் ஓட்டும் கொள்கை முரண்­பா­டுகள்...!

(இன்றைய 30.06.2017 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் ஒரு­புறம் நடந்து கொண்­டி­ருக்க, மறு­புறம் முஸ்­லிம்கள் தமக்­குள்­ளேயே அர­சியல், மார்க்க கொள்கை முரண்­பா­டு­களால் முட்டி மோதிக் கொள்­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த நோன்புப் பெருநாள் தினத்­தன்று வவு­னியா, சூடு­வெந்­த­பு­லவு கிரா­மத்தில்  பெருநாள் திடல் தொழு­கையின் போது இடம்­பெற்ற தாக்­குதல் சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சி­யிலும் கோபத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

புத்­தாடை அணிந்து, புது­மணம் பூசி தொழு­கைக்கு தயா­ரா­க­வி­ருந்த தொழு­கை­யா­ளிகள் மீது  காட்­டுமி­ராண்­டித்­த­ன­மான முறையில் தாக்­குதல் நடத்­தி­ய­மையும் அப்­பாவி வயோ­திபர் ஒரு­வ­ரது தலையை உடைத்து இரத்­த­வெள்­ளத்தில் ஆழ்த்­தி­ய­மையும் எந்­த­வி­தத்­திலும் ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும்.

பள்­ளி­வா­சலில் தொழுகை நடாத்­துதல், திடலில் தொழுகை நடாத்­துதல் எனும் இரு கொள்கை நிலைப்­பாடு கொண்­ட­வர்­க­ளுக்­கி­டை­யி­லான கருத்து மோதலின் வெளிப்­பாடே குறித்த சம்­ப­வ­மாகும். இந்த கருத்து மோதல் இலங்­கையில் மாத்­தி­ர­மன்றி உல­க­ளா­விய ரீதி­யிலும் காலா­கா­ல­மாக நீடிக்கும் ஒன்­றே­யாகும்.

இலங்­கையின் பல பகு­தி­க­ளிலும் ஒரே ஊருக்குள் பள்­ளி­வா­சல்­க­ளிலும் கடற்­கரை, மைதானம், வயல் வெளி போன்ற பகு­தி­க­ளிலும் பெருநாள் தொழு­கைகள் நடந்தே வரு­கின்­றன. கடந்த காலங்­களில் சில பகு­தி­களில் இது விட­ய­மாக முரண்­பா­டுகள் தோற்­றம்­பெற்று வன்­மு­றையில் முடிந்­ததும் உண்டு. அதே போன்­றுதான் சூடு­வெந்­த­பு­லவு சம்­ப­வமும் இடம்­பெற்­றுள்­ளது.

ஒருவர் தான் விரும்­பிய இடத்தில் சட்­ட­ரீ­தி­யான முறையில் தொழு­வ­தற்­கான உரிமை உண்டு என்­ப­தையும் அது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத­னைத்­த­டுப்­ப­தற்­கான உரிமை எவ­ருக்கும் இல்லை. அவ்­வாறு தடுப்­பது அடிப்­படை மனித உரி­மையை மீறும் செய­லாகும்.

அது­மாத்­தி­ர­மன்றி, நாட்டில் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­த­லங்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத சக்­திகள் தாக்­குதல் நடத்தி வரு­வதால் ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்­லிம்­களும் அச்­சத்தில் உள்­ளனர். அவ்­வா­றான சம­யத்தில் நாமே நமது தொழுகைத் தலங்­களில் இரத்­தத்தை ஓட்­டு­வது எந்­த­வ­கையில் நியாயம்?

முஸ்­லிம்கள் தீவி­ர­வா­திகள், வன்­மு­றை­யா­ளர்கள், மத்­ர­ஸாக்­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது என்­றெல்லாம் பௌத்த பேரி­ன­வா­திகள் கதை பரப்­பிக்­கொண்­டி­ருக்­கையில் அவற்றை உண்­மைப்­ப­டுத்­து­வ­தா­கவே இவ்­வா­றான சம்­ப­வங்கள் அமைந்­துள்­ளன.

இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லைந்­த­மைக்கு அர­சியல் கட்­சி­களும் மார்க்க குழுக்­க­ளுமே காரணம் என்றால் மிகை­யா­காது.

தேர்தல் காலம் வந்­து­விட்டால் எவ்­வாறு அர­சியல் கட்­சிகள் மக்­களை பிள­வு­ப­டுத்­து­கின்­ற­னவோ அதேபோல் மார்க்க கொள்கை வேறு­பாடு கொண்ட குழுக்­களும் ரமழான் போன்ற பருவ காலங்­களில் முரண்­பா­டு­க­ளையும் குழப்­பங்­க­ளையும் தூண்­டு­கின்­றன. இது முஸ்லிம் சமூ­கத்தைப் பீடித்­துள்ள பெரும் சாபக்­கே­டாகும்.

இந்த முரண்­பா­டு­களை களைந்து வேற்­று­மை­யிலும் ஒற்­றுமை காண்­ப­தற்­கான முயற்­சி­களை சிலர் ஆங்­காங்கே முன்­னெ­டுத்­தாலும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் இவ்­வா­றான மார்க்க கருத்து வேறு­பா­டுகள் கொண்ட குழுக்­களை ஒற்­று­மைப்­ப­டுத்தும் வகையில் உரு­வாக்­கப்­பட்ட ஒத்­து­ழைப்­புக்கும் ஒருங்­கி­ணைப்­புக்­கு­மான கவுன்­ஸி­லினால் கூட இந்த சவாலை வெற்றி கொள்ள முடியவில்லை.

எனவேதான் தொடர்ந்தும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுகின்ற குழுக்களை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான வன்முறை விரும்பிகளை, கொள்கை வெறியர்களை சமூகத்திலிருந்து ஓரங்கட்ட வேண்டும். அப்போதுதான் நிம்மதியான, சந்தோசமான பெருநாளை எம்மால் கொண்டாட முடியுமாகவிருக்கும்.

No comments

Powered by Blogger.