June 13, 2017

நெருக்கடி நிலையிலிருந்து முஸ்லிம்களை, மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு இல்லையா..?

(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

2015 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டு மக்கள் குறிப்பாக சிறு பான்மை மக்கள் நல்லாட்சி அரசினை பதவியில் அமர்த்தியது நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நிம்மதியாக வாழும் சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடனாகும்.மஹிந்த ராஜபக்ஷ அரசு காலத்தில் சிறுபான்மை இனத்தவர்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட வெறுப்பு சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழர்களும், முஸ்லிம்களும் தம் உயிர்களைக் கூட துச்சமாக மதித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவுசெதார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தமது ஆதரவினை வழங்குவதற்கு காரணம் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் இருந்தது என்றால் தவறிருக்காது. இன்று, நல்லாட்சி அரசினைப் பதவிக்கு கொண்டுவருவதற்கு பெரும் பங்களிப்புச் செத முஸ்லிம் சமூகம் நிம்மதியிழந்து எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றது.

சில நேரங்களில் நல்லாட்சிக்கு எதிரானவர்கள் இது உங்களுக்குப் போதுமா? என்று கேட்குமளவிற்கு நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. நாம் இதனை எழுதும் போது பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட 25 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நாளை விழிக்கும் போது கிடைக்கும் முதல் தகவல் முஸ்லிம்களுக்குரிய பள்ளிவாசலோ வர்த்தக நிலையம் ஒன்றோ எங்காவது தாக்கப்பட்ட செதியாக இருக்கும் என்ற நிலை தொடர்கின்றது.

இந்நாட்டு முஸ்லிம் சமூகம் இந்த அரசின் கீழ் இவ்வாறான தண்டனை ஒன்றைப் பெறுவதற்கு அவர்கள் செதுள்ள தவறு என்ன? என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் வருடத்துக்கொருமுறை வரும் மிகப் புனிதமான நோன்பு மாதத்தில் இச்சம்பவங்கள் தொடர்கின்றன. இந்தப் பீதி நிலை காரணமாக இரவு நேர வணக்கங்களுக்கு சில பிரதேசங்களில் பள்ளிவாசல்களுக்குக் கூட போக முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நெருக்கடி நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுப்பது இந்த அரசின் பொறுப்பு இல்லையா? அதேநேரம் இந்த விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் மீது சில பௌத்த பிக்குகள் குற்றஞ்சுமத்தியிருப்பது கவலையை  அளிக்கின்றது. இது பெரும்பான்மைச் சமூகத்தவரிடையே முஸ்லிம்கள் பற்றி தப்பபிப் பிராயங்களை வளர்ப்பதற்குக் காரணமாக அமையலாம். இந்த அரசு உருவாக்க முயற்சிக்கும் சமூகங்களுக்கிடையிலான நல்லெண்ணத்திற்கு இது நிச்சயமாகத் தடையாக அமையும்.

இந்த விடயங்களில் முஸ்லிம் சமூகத்தவர்களிடையே தவறுகள் இருந்தால் அது பற்றி கலந்து பேசுவதற்கு வாப்புக்கள் உள்ள நிலையில், இதனை நீடிப்பதற்கு இடமளிப்பதன் மூலம் நாடு எதிர்பார்க்கும் நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப முடியாது போகலாம்.

இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பாரிய பொறுப்புள்ளது. ஐ.தே.க. தலைவர்களும் அமைதிகாக்காது இந்த விடயத்தில் தலையிட்டு தொடரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கலான ஒரு விடயமாக இருப்பதனால் சிங்களத் தலைவர்களது தலையீடு இன்றுள்ள நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கு நிச்சயமாக உதவும்.

0 கருத்துரைகள்:

Post a Comment