Header Ads



போயாவுக்கு முதல்நாள் மதுவிற்பனை அதிகம் - பியர், வைன் பருக சந்தர்ப்பத்தைக் கூட்டவேண்டும்..!

உடலுக்கு பாரியளவு தீங்கிழைக்காத, பியர் மற்றும் வைன் போன்றவற்றை, பருகுவதற்கான சந்தர்ப்பத்தைக் கூட்டவேண்டும். இல்லையேல், செறிவு கூடிய மதுபானங்களைப் பருகுவதும், சட்டவிரோதமான கசிப்பைப் பருகுவதும் அதிகரித்துவிடும் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர போயாவுக்கு முதல்நாளன்றே மதுவிற்பனை அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (22) மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்களைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

மதுவகைகளுக்கான கட்டணங்களையும் வரிகளையும் அதிகரிக்க அதிகரிக்க, சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துகொண்டே செல்கின்றது. கசிப்பு பருகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாட்டில் 61 சதவீதமான கசிப்பு பாவனையாளர்கள் உள்ளனர்.  

கசிப்பு பயன்பாடு, வர்த்தகம் மற்றும் உற்பத்தி ஆகியன அதிகரித்துள்ளன. போயாவுக்கு முதல்நாளன்று, மதுபான வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மதுபானசாலைகளின் உரிமையாளர்கள், வீடுகளுக்கு போத்தல்களைக் கொண்டுசென்று, போயாதினத்தன்று, ஒன்றுக்கு இரண்டுமடங்கில் ஒரு போத்தலை விற்கின்றனர்.  

தாய்லாந்து ஒரு பௌத்த நாடாகும். அங்கும் மதுபானசாலைகள் இருக்கின்றன. அங்கு, ஒரேயொரு நாளில் மட்டுமே, மதுபானசாலைகள் மூடப்படும். அதாவது, பொதுத்தேர்தல் நடத்தப்படும் நாளன்று மட்டுமே மதுப்பானசாலைகள் மூடப்படும்.   

இவ்வாறான நிலையில், இங்கு, ஒவ்வொரு போயாவுக்கும் மதுபான சாலைகளை மூடுவதால், மதுபானங்களை பருகுவோர் மட்டுமன்றி விற்பனையும் அதிகரித்துள்ளது. சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியும் பாவனையும் அதிகரிக்கின்றது. இவை உடலுக்கு கேடுவிளைவிக்கின்றன.   

ஆகையால், பியர் மற்றும் வைன் விற்பனையில் விட்டுக் கொடுக்கும் வகையிலான சட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் இது தனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும் என்றும் கூறினார்.  

நாட்டில் வீரியமான மதுபானங்களை தவிர்க்க வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளது என்றும் அவர் கூறினார். இதேவேளை, நத்தார் தினத்தில் மதுபான தடை விதிப்பதால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.   

வீரியமான மதுபானங்களைத் தவிர்க்கச் செய்வதற்கு பியர், வைன் வகை மதுபானங்களின் விற்பனையில் விட்டுக்கொடுக்கும் வகையிலான சட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டுமென, அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.