Header Ads



மானுட சமத்துவமே 'இஸ்லாம்' - தொல் திருமாவளவன்

இஸ்லாம் என்பது மானுடத்தை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வாழ்வியல் கோட்பாடாகும். அது, உருவமில்லா ஓரிறை ஏற்பு(கலிமா), அன்றாடம் ஐவேளை தொழுகை(நமாஸ்), புனிதமிகு ரமலான் நோன்பு, புகழ்மிகு மெக்கா பயணம்(ஹஜ்), நலிந்தோர் நலன்பெற நன்கொடை(ஜக்காத்) என, தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்வாழ்நாளில் பின்பற்ற வேண்டிய ஐவகை கடமைகளைப் போதிக்கிறது. இவற்றின் அடிப்படையை ஆழ்ந்து நோக்கினால் நபிகள் நாயகத்தின் அதிநுட்பமான தொலைநோக்குப் பார்வைவையை அறிந்துகொள்ள இயலும்.
ஐவகை கடமைகளில் இறைவழிபாட்டையே மனிதனின் முதல் கடமையாக முன்வைக்கிறது இஸ்லாம். ஏனெனில், இறையச்சமே மனிதனை நெறிப்படுத்துவதற்கான வலுமிகு உத்தியென அது நம்புகிறது. இறைநம்பிக்கையிலிருந்தே இறையச்சம் உருவாக முடியும். இறையின் மீது நம்பிக்கை இல்லையெனில் இறையச்சம் என்பதற்கு வாய்ப்பில்லை. இறைநம்பிக்கையும் இறையச்சமும் மனிதனை ஒரு நெறிமுறைக்குள் உள்வாங்கும் என்பதே இஸ்லாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.
அத்தகைய இறைநம்பிக்கையும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பற்றியும் இஸ்லாம் மிக நுட்பமாகவும் தெளிவாகவும் வரையறை செய்கிறது. அதாவது, இறை என்பது 'பல' வாக இருக்கமுடியாது என்றும், 'உரு' வாக இருக்கமுடியாது என்றும் உறுதிபட கூறுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்டவையாகவோ பல்வேறு உருவங்களைக் கொண்டவையாகவோ இருப்பின், அது மனிதனின் விருப்புகளுக்கேற்ப, கற்பனைகளுக்கேற்ப கால ஓட்டத்தில் பல்வேறு திரிபுநிலைகளுக்கு ஆளாகி அதன் மூலத்தை இழக்கநேரும் என்பதே இஸ்லாம் உணர்த்த விரும்புவதாகும்.

ஒவ்வொன்றுக்கும் உருவம் தேவைப்படுகிறது. உருவம் தேவைப்படுகிறபோது, அது ஆணா, பெண்ணா என்கிற கேள்வி எழுகிறது. இந்நிலையில், ஆணும் தேவை, பெண்ணும் தேவை என்பது தவிர்க்க இயலாததாகிறது. அதன்படி, ஆணென்றாலும் பெண்ணென்றாலும் அவர்கள், என்னமொழி? என்ன இனம்? என்ன குலம்? என்ன மதம்? என்ன கலாச்சாரம்? போன்ற ஏராளமான கேள்விகள் எழுவது இயல்பாகிறது. ஏனெனில், மனிதர்கள் இவ்வாறான வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால், அவரவருக்கான இறையினை, அவரவருக்குரிய கலாச்சார அடையாளங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட வேண்டிய தேவை எழுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட இறை என்கிறபோது இவ்வாறு எண்ணற்ற உருவங்களையும் வடிவங்களையும் படைத்திட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இந்நிலையில், மனிதன் தன்னைப்போலவே தான் நம்பும் இறையின் உருவத்தையும் வடிவத்தையும் படைத்திட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். தான் உடுத்தும் ஆடைகளைப் போலவே, தான் ஏந்தும் ஆயுதங்களைப் போலவே, தான் அணியும் ஆபரணங்களைப் போலவே, தான் நம்பும் இறையின் மீது அவற்றையெல்லாம் போர்த்துகிறான். அமைதியின் உருவில், கருணையின் வடிவில், பயங்கர நிலையில், பழிவாங்கும் வெறியில் என தன் விருப்பங்களையெல்லாம் இறையின் மீது திணிக்கிறான்.
இவ்வாறு, மனிதர்கள் தமது விருப்பு வெறுப்புகளைத் தாம் வணங்கும் இறையின்மீது பூசுவதால், மனிதர்களிடையே நிலவும் முரண்பாடுகளும் அவரவரின் இறையின் மீதும் படிகின்றன. இதனால்தான் இறையின் பெயரால், இறைக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடிக்கின்றன. அவ்வப்போது வழிபாட்டுத்தலங்களை இடிக்கும் வெறியாட்டங்களும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை யாதெனில், ஓரிறைக்கு மாறாக, பல்வேறு இறைகளை ஏற்பதும், அவற்றுக்கு உருவங்களையும் வடிவங்களையும் படைப்பதேயாகும்.
மனிதர்களில் எவருக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு இருக்கமுடியாது என்பதைப் போதிக்கும் இஸ்லாம், எவ்வாறு மனிதன் ஒருவனை இறைக்கு இணையாக- இறை அவதாரமாக ஏற்கும் ? பிறப்பால் மனிதர்கள் யாவரும் சமமே என்பதில் உறுதியாகவுள்ள இஸ்லாம், இறை மட்டுமே மனிதனுக்கும் மேல் என்பதை வலியுறுத்துகிறது. மனிதனுக்கு இணை மனிதன்! இறைக்கு இணை எதுவுமே இல்லை ! அதாவது, இணை இல்லாததே இறையாகும்!
இறைக்கு இணை இல்லை என்கிறபோது, அது ஒரேஇறை தான் என்பதையும் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கமுடியாது என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது. இறையை, 'இறைவன்' என்றால் அது ஆண்பால் ஆகிறது. இறையை, ஆண்பாலாக ஏற்றால் அதற்கு இணையாக பெண்பால் உருவாகும். ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் அதுவும் இறையை மனித உருவத்தில்தான் உணரவைக்கும். அதுவே இறையை மனிதனுக்கு இணைவைப்பதாக அமையும். இறைக்கு மனிதவடிவில் சிலை வடிப்பதும் ஓவியம் தீட்டுவதும் உருவத்தால் இணை வைப்பதாகும் என்றால், இறைவன் என்ற ஆண்பால் சொல்லாட்சியோ அருவத்தால் இணை வைப்பதாகும்.
எனவே, இறை அல்லது கடவுள் என்பதுதான் ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ இல்லாத- இணை இல்லாத ஒரு பொது சொல்லாடலாக உள்ளது. அரபுமொழியில் 'அல்லா' என்பதுவும் இத்தகைய இணை இல்லாத ஒரு பொது சொல்லாகவே இருக்கமுடியும்.
மனிதன் இறை அல்லது கடவுளுக்கு இணை வைப்பதற்குக் காரணம், அவன் இறையைப் பலவாக ஏற்பதும் அவற்றுக்கு உருவம் கொடுப்பதும்தான் என்பதை இஸ்லாம் தெளிவுப்படுத்துகிறது. அத்துடன், இறைக்கு இணை கூடாது என்பது இறையின் பெருமையைப் போற்றுவதற்காக அல்லது உயர்த்துவதற்காக என்பதைவிட, மனிதனுக்கு இணை மனிதன்தான் என்னும் மானுட சமத்துவத்தையும் வலியுறுத்துவதற்காகத்தான் என்றும் புரிந்துகொள்ளலாம்.
இத்தகைய தொலைநோக்குப் பார்வையுடன்தான், நபிகள் நாயகம் இறைக்கு இணை கூடாது என்னும் அடிப்படையில், உருவமில்லா ஓரிறை ஏற்பை மனிதனின் முதல் கடமையாக வரையறுத்திருக்கிறார். இக்கடமையைப் போதிக்கும் இஸ்லாம், இறைநம்பிக்கையின் அடிப்படையில் மானுட சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சனநாயக கோட்பாடாகும்.
- தொல். திருமாவளவன்

1 comment:

Powered by Blogger.