June 22, 2017

அல் சவூத்தின் மகன் அல்லாத ஒருவர் சவூதியின் மன்னராவது முதல் முறையாக இருக்கும்..

சவூதி அரேபிய மன்னர் சல்மான் தனது மருமகனான முஹமது பின் நயெபுக்கு பதிலாக தனது மகன் முஹமது பின் சல்மானை முடிக்குரிய இளவரசராக நியமித்துள்ளார்.

31 வயதான இளவரசர் முஹமது பின் சல்மான் துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அவர் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார் என்று மன்னர் சல்மானின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

57 வயதான இளவரசர் முஹமது பின் நயெப் தனது அனைத்து பதவிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் உள்நாட்டு பாதுகாப்பு தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் புதிய முடிக்குரிய இளவரசருக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக சவூதியின் எஸ்.பீ.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தனது மகனின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் மன்னரின் இந்த முடிவுக்கு ஆளும் அல் சவூத் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களைக் கொண்ட விசுவாசத்தை வெளிப்படுத்தும் கவுன்சிலில் 34 இல் 31 உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

புதிய முடிக்குரிய இளவரசருக்கு பொதுமக்கள் தமது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று சவூதி மன்னர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

81 வயதான மன்னர் சல்மான் தனது ஒன்றுவிட்ட சகோதரரான அப்துல்லாஹ் பின் அப்துல் அஸிஸ் மரணித்ததை அடுத்து 2015 ஜனவரியில் புதிய மன்னராக முடிசூடினார்.

இதனைத் தொடர்ந்து ஒருசில மாதங்களுக்குள் அவர் தனது அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்தே முஹமது பின் நயெபை முடிக்குரிய இளவரசராகவும் முஹமது பின் சல்மானை பிரதி முடிக்குரிய இளவரசராகவும் நியமித்திருந்தார்.

முன்னதாக தனது 70 அல்லது 80 வயதுகளில் இருக்கும் மன்னர்களே ஆட்சி பொறுப்பிற்கு வந்த நிலையில் மன்னரின் இந்த மாற்றம் சவூதி சம்பிரதாயத்தை மீறும் செயல் என வர்ணிக்கப்பட்டது.

பிராந்திய பதற்றம்

விசுவாசத்தை வெளிப்படுத்தும் கவுன்ஸிலின் முக்கிமான சூழ்நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சவூதியின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவை ஆதரித்து முஹமது பின் நயெப் மன்னருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

முஹமது பின் சல்மானின் பதவி உயர்வு மன்னர் குடும்பத்தின் நெருங்கிய வட்டாரத்தால் எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும் சவூதி அரேபியா அண்டை நாடுகளான கட்டார் மற்றும் ஈரானுடன் பதற்றத்திற்கு முகம்கோடுத்திருக்கும் நிலையிலும், யெமனில் யுத்தம் ஒன்றில் சிக்கி இருக்கும் சூழலிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முஹமது பின் சல்மான் சவூதி அரேபியாவின் யெமன் யுத்தத்திற்கு பொறுப்பாக இருப்பதோடு, நாட்டின் எண்ணெய் கொள்கையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். எண்ணெய்க்கு அப்பாலான சவூதியின் எதிர்கால பொருளாதாரத்தை முன்னெடுப்பதிலும் அவர் முன்னின்று செயற்படுகிறார்.

குறிப்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் சவூதியில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2015 இல் யெமனில் வான் யுத்தம் ஒன்றை அரம்பித்த சவூதி, நாட்டு மக்களின் சலுகைகளை குறைத்ததோடு 2016இல் அரச எண்ணெய் நிறுவனமான அரம்கோவை பகுதி அளவு தனியார்மயப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது.

சவூதி அரேபியாவின் வழக்கு தொடர்வு முறையில் மறுசீரமைக்கும் ஆணை ஒன்றை மன்னர் வார இறுதியில் பிறப்பித்திருந்தார்.

இதன்மூலம் குற்ற விசாரணைகளை மேற்பார்வை செய்யும் முஹமது பின் நயெபின் அதிகாரம் பறிக்கப்பட்டது.

இதற்கு பதில் மன்னர் உத்தரவிட்ட புதிய வழக்கு தொடுனர் அலுவலகம் நேரடியாக மன்னரின் கீழ் வந்தது.

குறிப்பாக சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் தலைமையில் கட்டாரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் முஹமது பின் நயெப் முக்கிய பங்கு ஆற்றியதாக தெரியவில்லை.

தனது சிற்றப்பா மகன் முஹமது பின் சல்மானுக்கு முன் இளவரசர் நயெப் அண்மைக்காலத்தில் பொதுமக்கள் பார்வையில் இருந்து விடுபட்டவராக மாறியிருந்தார்.

தனது தந்தை சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் 2015இல் சவூதியின் ஏழாவது மன்னராக முடிசூடும் வரை பெரும்பாலான சவூதி மக்கள் அறியாத ஒருவராக இருந்த முஹமது பின் சல்மான் கடந்த மூன்று ஆண்டுகளில் தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

தலைமுறை மாற்றம்

சவூதி அரேபிய அரச ஊடகம் நேற்று வெளியிட்ட புகைப்படங்களில், மக்கா சபா மாளிகையில் வைத்து புதிய முடிக்குரிய இளவரசராக தனக்கு பதில் நியமிக்கப்பட்ட முஹமது பின் சல்மானுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் இளவரசர் நயெப்பின் கையை முத்தமிடுவதை காணலாம்.

தனது தந்தைக்கு அடுத்து முஹமது பின் சல்மான் பதவியேற்கும் பட்சத்தில் சவூதியின் நிறுவனரான மன்னர் அப்துல் அஸிஸ் அல் சவூத்தின் மகன் அல்லாத ஒருவர் சவூதியின் மன்னராவது முதல் முறையாக இருக்கும்.

இப்னு சவூத்தின் புதல்வர்கள் தற்போது அதிக வயது கொண்டவர்களாக இருக்கும் நிலையில் அடுத்த தலைமுறை பதவிக்கு வருவது குறித்து நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மன்னர் சல்மான் தனது சொந்த மகனை முடிக்குரிய இளவரசராக நியமித்திருப்பதன் மூலம் தனது குடும்பத்தில் ஏனைய கிளையினருக்கு அரியணை ஏறுவதற்கான வாய்ப்பை துண்டித்துள்ளார்.

இந்த அதிரடி முடிவு மன்னர் குடும்பத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். 

0 கருத்துரைகள்:

Post a Comment