Header Ads



அன்று, ஆடிய ஆட்டமென்ன..? இன்று..??

அமைச்சுப் பதவியில் இருந்த காலத்தில் அடாவடித்தனமாக நடந்துகொண்டு பொதுமகன் ஒருவரின் வீட்டு மதிலை இடித்துத்தள்ளிய சம்பவத்துக்கு நஷ்டஈடு செலுத்த மேர்வின் சில்வா இணங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் களனி தேர்தல் தொகுதி அமைப்பாளராக இருந்த அமைச்சர் மேர்வின் சில்வா, அப்பிரதேசத்தின் அனைத்துப் பாதைகளையும் அகலப்படுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன்போது அவர் பொதுமகன் ஒருவரது வீட்டு மதில் சுவரை அவரின் அனுமதியின்றி பலவந்தமாக இடித்துத் தள்ளி பாதை அபிவிருத்தி வேலையை முன்னெடுத்திருந்தார்.

இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அமைச்சர் மேர்வின் சில்வா தனது சொந்தப் பணத்தில் இருந்து நாலரை இலட்சம் ரூபாவை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.

அத்துடன் அமைச்சருக்கு பாதுகாவலாக நின்று ஒத்தாசை வழங்கிய அப்போதைய பொலிஸ் பொறுப்பதிகாரியும் சொந்தப் பணத்தில் இருந்து ஐம்பதினாயிரம் ரூபா வழங்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது.

எனினும் அமைச்சர் மேர்வின் சில்வா குறித்த நட்டஈட்டை வழங்கத் தாமதித்த காரணத்தினால் நேற்றைய தினம் அவருக்கு உச்சநீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் பாதிக்கப்பட்ட பொதுமகனுக்கு நாலரை லட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்கி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.