Header Ads



ட்ரம்ப் விஜயமும், வளைகுடாவின் உள்முரண்பாடுகளும், தெஹ்ரானின் விரிவாக்கமும்

ஸகி பவ்ஸ் (நளீமி)

டொனல்ட் ட்ரம்பின் ரியாத் விஜயம் நிறைவு பெற்ற அடுத்த நாள் அதிகாலை  கட்டார் மீதான தனது ஊடக யுத்தத்தை அல்அரேபியாவும் , ஸகை நியூஸ் செய்திச் சேவைகள் ஆரம்பித்தன. இன்று, கட்டாருக்கு எதிரான ஊடக யுத்தம் கடுமையான கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானை இஸ்லாமிய சக்தியாகவும் , நற்பு நாடாகவும் கட்டார் பிரகடனம் செய்துள்ளதாக போலியான செய்திகளை அல்அரேபியா (சவூதிஅரேபியா) மற்றும் ஸ்கைய் நிவ்ஸ் (எமிரேட்ஸ்) ஊடகங்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. குறித்த தினத்தில் இரண்டு நாடுகளது ஊடகங்களும் தமது வழமையான நிகழ்ச்சி நிரலை ஒரு புறம் வைத்து விட்டு , கட்டார் அரசையும் , அதன் கொள்கைகளையும் விமர்சனம் செய்யும் 'பிரேகிங் நியூஸ்' களை ஒளிபரப்பியது.  உண்மையில், கட்டார் மீதான வலைகுடா நாடுகளது திட்டமிட்ட தாக்குதல்களின் பின்புலத்தில் டொனல்ட் டரம்பின் வருகை முக்கியமாக பங்களித்துள்ளதனை  புரிந்து கொள்ள முடியும். வலைகுடா பிராந்தியத்தின் உள்ளக  அரசியல் நகர்வுகளை புரிந்து கொள்வதற்கான  தங்கக் கோட்பாடொன்று காணப்படுகின்றன. அதாவது, தமது மன்னராட்சிக்கு பிராந்திய ரீதியான  அச்சுறுத்தல்கள் ஏதும் காணப்படாத போது  தமக்கு மத்தியிலான உள்ளக முரண்பாடுகளுகளை முன்னுரிமைப்படுத்தி  பரஸ்பரம் பழிவாங்கிக் கொள்வார்கள். ஆனால், மன்னராட்சிக்கு வெளி அச்சுறுத்தல்கள் வலிமையடையும் போது 'ஒற்றுமைப்படுவார்கள்'.

 இந்தக் கோட்பாட்டின் ஒளியில் சமீபத்திய கட்டார் - வலைகுடா நாடுகளுக்கு இடையிலான உள்முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்ய முடியும். டொனால் ட்ரம்பின் வருகையையும் , 34 அரபு இஸ்லாமிய நாடுகளை ஒன்று கூட்டி அவர் ஆற்றிய உரையும் , கொடுத்த வாக்குறுதிகளும் மன்னராட்சிகளை இலக்கு வைத்துள்ள பிராந்திய எதிரிகளை அடக்கி விடும் சக்தியைக் கொண்டவை என மன்னர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அதாவது, நான்கு வருட கால அரபு வசந்தம் மற்றும் இரண்டு வருட கால தெஹரானின் சுற்றி வலைப்பு இராஜதந்திரித்திலிருந்தும் மன்னாராட்சிகள் விடுதலையடைந்துள்ளதாக மன்னர்கள் நினைக்கிறார்கள். இந்தப் பின்புலத்திலேயே, தமக்கு மத்தியில் இஸ்லாமிய சக்திகளுக்கு ஆதரவாக நின்ற கட்டார் அரசாங்கத்தை பழிவாங்கும் படலத்தை வலைகுடா மன்னர்கள் ஆரம்பித்திருப்பதன் பின்னணியாகும்.  

 சவூதி அரேபியா தலைமையிலான வலைகுடா நாடுகளது கொள்கைகள் எப்போதும் தூரநோக்கற்றவை. மட்டுமன்றி, பல தடவை அதனுடைய் கொள்கைககள் எவ்வளவு முட்டாள்தனமானவை என்பதனையும் அவை நிரூபித்திருக்கின்றன. மத்திய கிழக்கின் மீதும் , அகன்ற ஸூன்னி முஸ்லிம் உலகின் மீதும் தெஹ்ரான் விரித்துள்ள வலையை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுடனான ஆயுத ஒப்பந்தங்கள் போதுமானது என்ற வலைகுடாவின் நம்பிக்கை அத்தகைய முட்டாள் தனத்தில் புதியதொரு தோற்றப்பாடு மட்டுமே. அமெரிக்க அரசாங்கத்தின் ஈரான் எதிர்ப்பு வெற்றுக் கோஷங்களின் மீது சார்ந்து நின்று சவூதிஅரேபியா தலைமையிலான வலைகுடா மன்னர்கள் சிந்திக்கிறார்கள். உண்மையில், அமெரிக்கா அரசு ஈரானுடன் முரண்பட்டுக் கொள்ளும் நிலையில் இல்லை. மாறாக,  சவூதி அரேபியா – ஈரான் முரண்பாட்டைப் பயன்படுத்தி தனது கஷ்டப்படும் தேசிய பொருளாதார பலத்தை மீள் சரி செய்து கொள்வதற்கு வொஷிங்டன் முயல்கின்றன.  

இங்குள்ள சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் , ரியாதில் 34 அரபு இஸ்லாமிய உலகின் தலைவர்களை முன்வைத்து ட்ரம்ப் ஆற்றிய உரையில் 'நீங்கள் இணைந்து தெஹ்ரானை ஓரம் கட்ட வேண்டும்' எனக் கூறினார். ஆனால், ட்ரம்ப் விஜயத்திற்கு சில தினங்களின் பின்பு 'அமெரிக்காவின் நிறுவனங்களுடன் ஈரானிய கம்பனிகள் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி , இரு நாடுகளுக்கு மத்தியிலான ஏற்றுமதி - இறக்குமதி சமாச்சாரம் ஆரம்பித்து விட்டதாக நிவ்யோர்க் டய்ம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டதாகும்.. ஒரு புறத்தால் ஆயுதத்தை விற்பதற்காக ஈரானை வைத்து அமெரிக்கா பயம் காட்டுகிறது. மறுபுறத்தால், ஈரானுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துகிறது. இந் இரட்டை முகத்தை ரியாத் புரிந்து கொள்ள விட்டாலும் கூட, தெஹ்ரான் சரியாகப் புரிந்திருக்கிறது. 

எனவேதான், ஈரானிய கொள்கை வகுப்பாளர்களும் அமெரிக்காவை நிதானமாக கையாள துவங்கியுள்ளார்கள். அதாவது,  'ட்ரம்ப் ஒரு வியாபாரி. எனவே, இலாபமீட்டும் எத்தகைய வியாபார நகர்வையும் அவர் புறக்கணிக்கப் போவதில்லை. அந்த வகையில், ஈரானியக் கம்பனிகளுடன் முரண்பட்டுக் கொள்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முழுமையாக இணங்கப் போவதில்லை' என்பது தெஹ்ரானின் வாசிப்பாகும். ஈரானுக்கு எதிரான கர்ஜனைகளை வலைகுடா பிழையாகப் புரிந்து கொண்டாலும் கூட, தெஹ்ரான் சரியாகவே அதனைப் புரிந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

 'தெஹ்ரான் - வொஷிங்டன்' வியாபார ஒப்பந்தம் பற்றிய நியூயோர்க் ட்யம்ஸ் செய்திக் குறிப்பானது , புதிய அரசாங்கத்தின் நகர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதில் முக்கியமான விடயம் யாதனில் , ஈரானுக்கு எதிரான வொஷிங்டனின் கர்ஜனைகள் அனைத்தும் வலைகுடாவின் பெட்ரோ டொலர்களை சுரண்டுவதற்கான வியூகமே அன்றி வேறில்லை என்பதாகும்.  காரணம் , மத்திய கிழக்கில் தமது நலன்களுக்கு ஏற்ப வொஷிங்டனை இயக்குவிக்கும் இராஜதந்திர வலிமை வலைகுடா அரசுகளிடம் இல்லை. மறுபுறம், தற்போதைக்கு தெஹ்ரானை முழுமையாக கட்டிப் போடுவதனை அமெரிக்கா வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் ஆதரிக்கவும் இல்லை. இதனையே அமெரிக்க கம்பனிகள் தெஹ்ரானுடன் ஆரம்பித்திருக்கும் வியாபார ஒப்பந்தங்கள் சுட்டி நிற்கின்றன. இத்தகைய உள்நுணுக்கங்களை கிடப்பில் போட்டு விட்டு , தெஹ்ரானை ட்ரம்ப் பார்த்துக் கொள்வார். நாங்கள் எங்கள் எதிரியை தீர்த்துக் கட்டுவோம் என கட்டாரை பழிவாங்க வலைகுடா கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறது. 

உண்மையில் , தெஹ்ரானின் ஆதிக்க விரிவாக்க வாதம் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்;தாலும் கூட, அதனை அரபு மன்னர்கள் முன்வைக்கும் 'அரசியல் வியூகங்களின்ன' மூலம் தீர்க்க முடியாது என்பது மட்டும் நிச்சியமானது. ஏனெனில், பிராந்தியத்தில் இஸ்லாமிய சக்திகள் எழுச்சியடைக் கூடாது , மனித உரிமை போராளிகள் தோற்றம் பெறக் கூடாது , இஸ்லாத்தின் விரிந்த சிந்தனைகளை கலந்துரையாடக் கூடாது , அரசுக்  சேவகம் செய்யும் பிழையான ஸூபித்துவ சிந்தனைகளே கோலோச்ச வேண்டும் , மக்;கள் தங்களது அபிலாஷைகளை வாய் திறந்து கேட்கக் கூடாது போன்ற அடிப்படைகளில் நின்று இயங்கும் அரபு நாட்டு மன்னர்களால் ஈரானின் விரிவாக்க வாதத்தையோ அல்லது அதற்கானதொரு அகன்ற இராஜதந்திரத்தையோ வகுக்க முடியாது என்பது நிதர்சனம். ஏனெனில், மேற்கூறப்பட்ட அடிப்படைகள் ஒவ்வொன்றும் ஈரானின் விரிவாக்கவாத செயற்திட்டத்தின் ஒவ்வொரு கூறினையும் பிரசவித்திருக்கின்றன.  அதாவது, ஈரான் தனது ஆழமான விரிவாக்க செய்திட்டத்தை செயற்படுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில், அமெரிக்காவின் போலி வாக்குறுதிகளை நம்பி நிலையில் அரபு வசந்தத்தை ஆதரித்த குற்றத்தித்திற்காக அரபுலக மன்னர்கள் கட்டாரை பழிவாங்கக் கிளம்பிருக்கிறார்கள் என்றால் அரபு மன்னர்களின் வெளிநாட்டுக் கொள்கை எந்தளவு வங்கரோத்து நிலைக்கு சென்றிருக்கின்றன என்பதனை புரிந்து கொள்வதற்கு அதுவொன்றே தெளிவான ஆதராமாகும். இதே போன்றுதான் சிரியாவிலும் , யெமனிலும் ஈரானிய ஏஜன்டுகள் போராடிக் கொண்டிருக்கும் போது 'எகிப்தில் இராணுவப் புரட்சியை' சவூதி அரேபியா நடாத்தி முடித்தது. 

மொத்தத்தில், ஈரானின் விரிவாக்கவாத செயற்திட்டத்தை பலப்படுத்தும் கூறுகளை , காரணிகளை தமது வெளிநாட்டுக் கொள்கையின் உள்ளீடுகளாக கொண்டிருக்கும் அரபு நாடுகள் எவ்வாறு அதற்கெதிராக இராஜதந்திரத்தை வகுக்க முடியும்? என்ற கேள்வி உரத்துக் கேட்கப்பட வேண்டியதே.

Zacky Fouz

3 comments:

  1. Iran playing smart game to separate Qatar from gulf and they will continue their munafic duty to destroy all the gulf country

    ReplyDelete
  2. this article has very facts!

    ReplyDelete
  3. Translate and send it to Arab news that is worth

    ReplyDelete

Powered by Blogger.