Header Ads



பொலிஸாரின் தவறான அறிக்கைகள், இனவாதிகளை பலப்படுத்தக்கூடாது

(நவமணி பத்திரிகை, வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம்)

இலங்கை முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு தீக்கிரையாக்கப்படும்போது, காப்புறுதியைப் பெறுவதற்காக உரிமையாளர்களே தீ மூட்டிக்கொள்வதாக நாட்டில் சட்டத்தை நிலைநாட்டும் உயரதிகாரிகள் தெரிவிக்கும் விடயம் இன்று எள்ளி நகையாடப்படும் விடயமாக மாறியுள்ளது. 

செவ்வாயன்று நுகேகொட விஜேராமையில் முஸ்லிம் வர்த்தகரொருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகள் மேற்படி தெரிவித்துள்ளனர். 

நுகோகொட வர்த்தக நிலையத்துக்கு தீ வைத்துவிட்டுச் செல்லும் காட்சி அங்கிருந்த சீ.சீ.ரீ.வி கமராவொன்றில் பதிவாகியுள்ள நிலையில் பொலிஸார் முழுமையான பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னர் இவ்வாறு தெரிவித்திருப்பது ஏன்? என்ற கேள்வியை நாம் எழுப்புகின்றோம். 

கடந்த ஒன்றறை மாதங்களுக்குள் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தளங்கள், வர்த்தக நிலையங்களை  இலக்குவைத்து 24 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு, நேற்று அதிகாலை மகரகமையில் மேலுமொரு முஸ்லிம் வர்த்தக நிலையம் தீ வைக்கப்பட்டுள்ளது. 

செவ்வாயன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் றவூப் ஹக்கீம், முஸ்லிம்களை இலக்குவைத்து நடைபெறும் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றிருப்பதாக தெரிவித்திருந்தார். 

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்படும்போது, தீ மூட்டப்படும்போது மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்த சந்தர்ப்பங்கள் இதற்கு முன்பும் இடம்பெற்றுள்ளது. எனினும் பின்பு வெளியாகும் அரச பகுப்பாய்வு அறிக்கைகள் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் படியாக அமைந்துள்ளது. அளுத்கம மல்லிகாஸ் எறிப்பு சம்பவத்தில் பொலிஸாரின் கருத்துக்கள் முற்றும் பிழையானதாக அமைந்திருந்தது. 

முஸ்லிம்களுக்கெதிராக நடைபெறும் இவ்வாறான சம்பவங்களில் அரச பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு முன்னதாகவே மின் ஒழுக்கு அல்லது காப்புறுதி பெறும் நோக்கில் தீவைக்கப்பட்டுள்ளது என்று உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதால் இனவாதிகளுக்கு அது சார்பாக அமைந்துவிடக்கூடும். அது பாதிக்கப்பட்ட வர்த்தகரை மேலும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கவும்கூடும்.  

இலங்கை 30 வருட பயங்கரவாதத்தை வென்ற நாடு என்று சர்வதேசத்தில் பிரபல்யம் பெற்றுள்ளதோடு, அரசியல் தலைவர்களும் அடிக்கடி மார்தட்டிக்கொள்வதுண்டு. நாட்டின் பாதுகாப்புத் துறையில் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகும் படியாக பொலிஸாரின் செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது. நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்பெறவேண்டும். நாட்டில் மீண்டுமொரு போர் நிலை உருவாகமுன்னர் இனவாதிகள் ஒழிக்கப்படவேண்டும். 

No comments

Powered by Blogger.