Header Ads



“விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச்செல்லும்'' - குவைட் அமீர் எச்சரிக்கை

கட்டார் மற்றும் சக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் (ஜி.சி.சி) மூன்று அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டிருக்கு பிரச்சினை “விரும்பத்தகாத விளைவுகளுக்கு” இட்டுச்செல்லும் என்று இந்த முறுகலுக்கு தீர்வுகாண மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குவைட் எமீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஷெய்க் சபாஹ் அல் அஹமது அல் சபாஹ் குவைட் தேசிய செய்தி நிறுவனத்திற்கு கூறும்போது, ஜி.சி.சி உறுப்பு நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதை பார்க்க கடினமாக உள்ளது என்றார்.

“37 ஆண்டுகளுக்கு முன்னர் ஜி.சி.சியை கட்டி எழுப்பிய தலைமுறை என்ற வகையில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதை பார்க்க மிகக் கடினமாக உள்ளது. இது விரும்பத்தகாத விளையுகளுக்கு இட்டுச் செல்லும்” என்று அவர் கூறினார்.

“ஜி.சி.சியை கட்டி எழுப்பிய தருணத்தில் இருந்தவன் என்பதாலேயே சகோதரர்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் மத்தியஸ்த முயற்சிகள் இன்றி என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. என்னால் அப்புறப்படுத்த முடியாத பொறுப்பாக அது உள்ளது.

எத்தனை கடினமாக இருந்த போதும் பரவாயில்லை சகோதரர்களுக்கு இடையில் நடுநிலை வகிக்க என்னாலான முயற்சிகளை நான் செய்வேன்” என்றும் குவைட் எமீர் குறிப்பிட்டார்.

தற்போதைய பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வொன்றை காண்பதற்காக 87 வயதான ஷெய்க் சபாஹ் கடந்த வாரம் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

இந்நிலையில் குவைட்டின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

தீவிரவாதத்திற்கு உதவுவதாக குற்றம் சாட்டி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர மற்றும் போக்குவரத்து உறவுகளை துண்டித்துக் கொண்டன. தன் மீதான குற்றச்சாட்டை கட்டார் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

No comments

Powered by Blogger.