Header Ads



துபாய் சர்வதேச, திருக்குர்ஆன் விருது நிகழ்ச்சி


21-வது ஆண்டு, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது (DIHQA), நிகழ்ச்சி துபாய் சேம்பர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த அல்ஜீரிய அறிஞர் பேராசிரியர் மப்ரூக் ஸைத் அல் கைர் தனது உரையின் நிறைவில் ‘சகிப்புத் தன்மையும் தன்னடக்கமும் இஸ்லாத்தின் இரு பெரும் தூண்கள்’ என்று குறிப்பிட்டார்.

மேலும், “மனிதனுக்காக எல்லாமே படைக்கப்பட்டாலும், மனிதன் ஒரு மிகச் சிறந்த காரியத்திற்காகப் படைக்கப்பட்டான். அக்காரியமானது தன்னைப் படைத்த இறைவனை அறிந்து, விரும்பி, பக்தியோடு வழிபடுவதற்காக” என்றார்.

“எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னை நம்புவதற்கான சுதந்திரத்தை நமக்கு வழங்கியுள்ளான். இறுதியில் அவனைச் சென்றடைவதற்காக ஆகச் சிறந்த மனதையும் இப்பிரபஞ்சத்தத்தையும் நமக்கு அளித்துள்ளான். இறைவனுக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமானால், நாம் சகிப்புத் தன்மையும் தன்னடக்கமும் கொண்டிருக்க வேண்டும்” என்றும் பேசினார்.

தொடர்ந்து, ‘பாவம் செய்தவர்களிடம் கனிவாக இருக்கும்படியும் நம்மையே இறைவனாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை எடை போடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியையும் பேராசிரியர் அறிவுறுத்தியதோடு, யாருமே செம்மையானவர்கள் அல்ல. ஒவ்வொருவரிடமும் கருணையோடும் சகிப்புத் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேராசிரியர் ஸைத் அல் கைர் சிறப்பாகப் பேசினார்.

பிறமொழிகளில் சொற்பொழிவுகள் அல் நாசர் லீஷர்லேண்ட் கிளப்பிலும், பெண்களுக்கென்று பிரத்யேக சொற்பொழிவுகள் துபாய் மகளிர் சங்கத்திலும் நடந்தேறி வருகின்றன.

திருக்குர்ஆன் ஓதும் போட்டிக்கு இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 103 பேர் பங்கேற்கின்றனர்.

கடுமையான தர ஆய்வின் அடிப்படையில், போட்டியாளர்களின் திறமை, நேர்மை ஆகியவற்றுடன் சர்வதேச குர்ஆன் ஓதுவதில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் படைத்தவர்களா என்று அறிந்து அத்தகைய நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புனித குர்ஆனை மிகவும் அழகாக உச்சரித்து ஓதுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஒசாமா அல் சஃபி,  ஷேக் அப்துல் அஸீஸ் ஹுசைன் அல் ஹோஸ்னி மற்றும் இராக்கைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரஸாக் அப்தன் அல் துளைமி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

துபாய் கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூமெல்ஹா பேராசிரியர் ஸைத் அல் கைரையும் ஆறாவது இரவு விருதுக்கான புரவலர்களையும் சிறப்பித்தார்.

அமைப்புக் குழு சார்பில் பார்வையாளர்களுக்கான அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியும் நடத்தப்பட்டது. அதில் பலர் பணப் பரிசுளையும் விலையுர்ந்த பரிசுகளையும் வென்ற மகிழ்ச்சியில் நிறைவாகச் சென்றனர்.

-ஜெஸிலா பானு

No comments

Powered by Blogger.