Header Ads



கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (02) காலமானார். 

இந்தியாவைச் சேர்ந்த அவர் தனது 80 ஆவது வயதில் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மூச்சு திணறலால் மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1937ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி பிறந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். வானம்பாடி இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கிவந்தவர்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

மதுரை மண்ணின் மைந்தர்
கவிக்கோ என்று போற்றப்படும் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தார். உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள் என்பதால் இலக்கிய ஆர்வம் இயல்பாகவே இருந்தது.

தமிழ் பேராசிரியர்
கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றியுள்ளார்.

பன்மொழி புலமை
சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட அப்துல் ரகுமான், தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாகவும் இவர் விளங்கினார்.

பால்வீதி
இவரின் முதல் கவிதை தொகுப்பு ‘பால்வீதி' 1974ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை தமிழில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

சாகித்ய அகாடமி விருது வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்த் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் 1999ஆம் ஆண்டு எழுதிய 'ஆலாபனை' கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

வென்ற விருதுகள் கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார். அட போட்ட கருணாநிதி திமுக தலைவர் கருணாநிதியுடன் நீண்ட காலம் நட்புடன் பழகி வந்தவர் அப்துல் ரகுமான். இனிய உதயம் என்ற இலக்கிய இதழில் அப்துல்ரகுமான் எழுதிய "அரசு ஊழியர்களே! அரசு ஊழியர்களே! அஞ்சி அஞ்சி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே! உங்களுக்கோர் நற்செய்தி; இனிமேல் அஞ்சாமல் வாங்குங்கள்; சட்டமே அனுமதிக்கிறது!" என்ற கவிதையை ரசித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உயிர் பிரிந்தது, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் மூச்சுத் திணறல் காரணமாக, அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.