Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் - மிகவும் மனம் வருந்துகிறோம்.

“எந்தவொரு இனத்தையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அரசாங்கம் கண்டிப்பதுடன், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

“அத்துடன் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களுடைய ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், இனவாதத்தை கண்டு அஞ்சப்போவதில்லை” என்றும். அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “அண்மைக்காலமாக, இஸ்லாமியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, நேற்று  இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

“அண்மைக்காலமாக, இஸ்லாமிய வர்த்தக நிலையங்கள், வீடுகள், இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து நாம் மிகவும் மனம் வருந்துகிறோம்.

“வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தனிநபர்கள் மற்றும் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் அருவருக்கத்தக்க பேச்சுக்கள் உள்ளிட்ட சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

“சிறுபான்மை இனத்தவர்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை தூண்டுபவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்துக்கு ஏற்ப, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளோம்.

இத்தகைய சம்பவங்களின் போது குற்றவாளிகளின் சமூக அந்தஸ்து, இன அல்லது மதப் பின்னணி அல்லது அரசியல் சார்புகள் எவற்றையும் கருதாது என எவ்வித பாரபட்சமுமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

1 comment:

  1. அழகான மிகவும் கவர்ச்சிகரமான அறிக்கை... மிக்க நன்றி உங்கள் அரசாங்கத்தின் அறிக்கைக்கு மற்றும் உத்தரவாதத்திற்கு.... இவர்கள் கூறுவது போல யாரும் கைது செய்யப்பட போவதில்லை... நாங்கள் நிச்சயமாக நம்பிக்கை இழந்து விட்டோம்...

    ReplyDelete

Powered by Blogger.