May 11, 2017

TNA + PMGG உடன்படிக்கையில் என்னதான் உள்ளது..?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திக்கும் இடையில் 09.09.2013) மன்னாரில் வைத்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எட்டு அம்சங்கள் உள்ளடங்கிய மேற்படி புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் திரு. மாவை.சோ. சேனாதிராஜா (பா.உ) அவர்களும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பு சார்பாக அதன் மத்திய நிறைவேற்றுக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) அவர்களும் கையொப்பமிட்டனர். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 8 அம்சங்கள்:

1.ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் ‘சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம்’ மிகப் பிரதான கூறாக அமைகிறது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், தேசிய நல்லிணக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இவ்விரு சமூகங்களினதும் நல்லிணக்க முயற்சியின் ஒரு அம்சமாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்படுகின்றது.
2.அமையப்போகும் வட மாகாண சபையின் செயற்பாடுகளானது, பண்பாட்டு விழுமிய அரசியலினதும் நல்லாட்சியினதும் மூலக்கூறுகளான ஜனநாயகம், நீதி, தர்மம், சமத்துவம், மனிதநேயம், நல்லிணக்கம், சகவாழ்வு, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டவாட்சி போன்றவற்றின் அடிப்படைகளில் அமைதல் வேண்டும்.
3.1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இருப்பு, பாதுகாப்பு, மத பண்பாட்டுக் கலாச்சார உரிமைகள் என்பன உறுதிசெய்யப்படுவதோடு இம்மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டமானது, வடக்கு முஸ்லிம்களுக்கான காணிப்பகிர்வு, வீடமைப்பு, தொழில் வாய்ப்பு, மற்றும் வாழ்வாதாரம் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.
4.வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் மக்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
•1990ஆம் ஆண்டிற்கு முன்னர் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் பாரம்பரியக் குடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் வட மாகாணம் என்பது முஸ்லிம் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். அவர்கள்  தமது சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும், தமது பூர்வீகக் குடியிப்புக்களையும் கைவிட்டு நாட்டின் ஏனைய பாகங்களுக்குச் சென்றுசொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை வருந்தத்தக்கதாகும்.
• வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் அவர்களின் சந்ததிகளும் இயன்றவரை விரைவாக தத்தமது பாரம்பரியக் குடியிருப்புப் பகுதிகளில் மீளக்குடியேறி தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றுறுதிகொண்டுள்ளது.
• அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவதற்கு ஊக்குவிக்கப்படுவதோடும், தமது குடியிருப்புக்களை மீளமைத்து தமக்குரிய கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்குவழங்கும்.
•வட மகாண முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப் பிரச்சினைக்கும் வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதேயளவு கவனிப்பும் முக்கியத்துவமும் வழங்கப்படும். இம்மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தவருக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான கவனிப்பு எவ்விதமான பாரபட்சங்களுமின்றி கிடைக்கப பெறுவதை இம்மாகாண சபை உறுதிசெய்யும்.
•மேற்படி மீள்குடியேற்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையும் செயலணியும் இரு தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படல் வேண்டும். அமையப்போகும் வடக்கு மாகாண சபையின் மாகாண சபை நிர்வாகக் கட்டமைப்புகளில் முஸ்லிம்களின் போதிய பங்குபற்றுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
5.வட மாகாணத்தில் வாழும் சகல சமூகங்களும் பரஸ்பர புரிந்துணர்வோடும், நல்லிணக்கத்தோடும், அர்த்தபூர்வமான சகவாழ்வு மேற்கொள்வதனை ஊக்கப்படுத்துவதற்கும், உறுதிசெய்வதற்குமான உழைப்பினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு இதய சுத்தியுடனான அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும்.
6.மேலும் அமையப்போகும்  வட மாகாண சபையானது ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட நல்லாட்சிப் பண்புகளைப் பிரதிபலிக்கும் முன்மாதிரியான ஒரு மாகாண சபையாக இந்நாட்டில் செயற்படுவதற்கான சகல பங்களிப்புகளையும் அதுசெய்யும்.
7.மேற்படி உடன்பாடுகளின் அடிப்படையில் 2013ஆம் ஆண்டிற்கான வட மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்டபாளர் பட்டியலில் மன்னார் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளார்
8.அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றும் தெரிவுசெய்யப்படாதவிடத்து நியமனமுறை மூலம் அவரது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் பற்றி சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்.  PMGG ஊடகப்பிரிவு: 

8 கருத்துரைகள்:

இதில் எங்கே மீளஅழைத்தல், வேறொரு பிரதிநிதியை பதிலீடு செய்தல் என்பவை குறிப்பிடப் பட்டுள்ளன?
குறித்த பிரதிநிதியை தவிர, வேறொருவரை நியமிப்பது குறித்து ஒரு வார்த்தையும் இதில் இல்லையே?

இப்படி இருக்கும் பொழுது அஸ்மின் அவர்களை இராஜினாமா செய்ய சொல்வதில் எந்த நியாயமும் இல்லையே?

இந்த ஒப்பந்தம் மன்னாரில் தேர்தலில் இறக்கப்பட்டுள்ள உறுப்பினருக்கு உறுப்புரிமை கொடுப்பது பற்றி மட்டுமே பேசுகின்றது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப் படும் முன்னரே அஸ்மின் அவர்கள் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

மேலும் குறிப்பிட்ட உறுப்பினருக்கு பதவியை வழங்குவது குறித்துத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதே தவிர, கட்சிக்கு ஒரு ஆசனத்தை வழங்குவது குறித்து அல்லவே?

அதுவும் ஒப்பந்தம் செய்தது PMGG ஆகும், NFGG அல்லவே?

பதவி PMGG க்கு உரியது என்று ஒப்பந்தத்தில் இல்லை, மாறாக, மன்னாரில் போட்டியிடும் வேட்பாளருக்கானது என்றுதான் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

NFGG, PMGG யில் இதனை விளங்கிக் கொள்ளும் அளவிற்கு படித்தவர்கள் யாரும் இல்லையா?

அஸ்மின் அய்யூப் அவர்கலை மீள் அழைப்பதாக உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தால்
அதையும் பகிரங்கப்படுத்த வேண்டும்

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து வழங்கிய வாக்குறுதியினை மீறியாயினும் கூட, ,தனது பதவியினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அஸ்மின் முயற்சிப்பதாகவே தெரிகின்றது. இந்த ஆக்கமும் கூட அவரால் எழுதி வெளியிடப்பட்ட ஒன்றாகவே நம்புகிறேன். வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பான நலன்களை மையப்படுத்திய ஒப்பந்தம் ஒன்றினையே NFGG (PMGG) , TNA உடன் செய்திருந்தது. அதில் மீளழைப்பு பற்றி சொல்லப்பட்டிருகின்றதா? என்று தேடுவதில் அர்த்தம் இல்லை. அந்த மீளழைப்பு NFGG யின் கொள்கைப் பிரகடனக் கொள்கையில் இருக்கிறதா என்பதனையே பார்க்க வேண்டும். அத்தோடு அஸ்மின் பதிவியினை பாரமெடுக்கும் போது யாழ்ப்பாண பள்ளிவாயலில் மேற்கொண்ட சத்திய வாக்குறுதியில் , அந்த மீளழைப்பு சொல்லப்பட்டிருகின்றதா என்பதனை பார்க்க வேண்டும். அந்த இரண்டு இடங்களிலும் அது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்பட வேண்டிய இடங்களில் மீளழைப்பு தெளிவாக சொல்லப்பட்டிருக்க , சொல்லப்படத் தேவையில்லாத இடங்களில் சொல்லப்படவில்லை என்பது சொல்லப்படக்கூடிய காரணம் அல்ல.
அத்தோடு மீளழைத்தல் உட்பட NFGG யின் அனைத்து , கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே இப்பதவி அஸ்மின் அவர்களுக்கு வழங்கப்பட்டது. என்பதனையும் இதனை ஆரம்பத்திலேயே TNA இடம் தெளிவு படுத்தியிருந்தோம் என்பதனையும் NFGG யின் அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டிருந்தது.
எனவே இப்படி சுற்றி வளைத்து காரணங்களை கண்டு பிடிக்காமல் சத்தியம் செய்து வாக்களித்த கடமையினை அஸ்மின் நிறை வேற்ற வேண்டும்.. இதனைத் தவிர செய்வதற்கு வேறொன்றும் இல்லை....

ஒரு மாகாண சபை உறுப்பினர் பதவி, அதுவும் போனஸாக கிடைத்தது, அதனை வைத்துக்கொண்டு இந்த ஊர் பேர் தெரியாத கட்சி இந்த ஆட்டம் போடுகின்றது என்றால், இவர்களுக்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்தல் ஆளை ஆள் வெட்டிக்கொண்டு சாகுவார்கள். அடுத்த தேர்தலில் இந்த GG கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடம் படிப்பித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சகோதரா,

GG கட்சி இங்கு எந்த ஆட்டமும் போடப்படவில்லை. கடந்த வட மாகாண சபைத் தேர்தல் நடந்த போது அச் சபையினை TNA தான் கைப்பற்றுமென உறுதியாகத் தெரிந்த போதும்கூட வடமாகாண முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையினையும் TNA வுடன் செய்வதற்கு எவரும் தயாராகவிருக்கவில்லை. முஸ்லிம் சமூகம் சார்ந்த அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை அவசியப்பட்ட போதிலும் மஹிந்தவுக்கும், கோட்டாவுக்கும் பயந்ததன் காரணமாகவே முன்வரவில்லை. ஆனாலும், பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் NFGG மிகத் தெளிவான பகிரங்க ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அதிலொரு அம்சம்தான் அம்மக்களுக்காக ஒரு பிரதிநிதியை நியமனம் செய்வதாகும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் பிரதிநிதி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்ற மற்றுமொரு ஒப்பந்தத்தினை அஸ்மின் அய்யூப் அவர்களுடன் NFGG செய்திருக்கிறது.


இவ்வாறான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் பேரில்தான் அஸ்மின் நியமிக்கப்படுகிறார், என்பதனையும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் இரண்டரை வருடங்களின் பின்னர் அவர் மீளழைக்கப்படுகின்றார் என்பதனையும் TNA தலைவர்களுக்கு மிக ஆரம்பத்திலேயே NFGG சொல்லியிருக்கிறது. அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக பேசப்பட்ட, உடன்பாடு காணப்பட்ட, மற்றும் உறுதி மொழி அளிக்கப்பட்ட பிரகாரமே NFGG அஸ்மினை இராஜினாமா செய்யும்படி கோரியிருக்கிறது. ஆனால் அஸ்மின்தான் தான் வழங்கிய உறுதி மொழிக்கேற்ப நடந்து கொள்ளாமல் இன்னும் இழுத்தடிப்புச் செய்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் NFGG தனது கடமையைச் செய்திருக்கிறது; இன்னமும் செய்யமுனைகிறது. இருந்தாலும், அதனிடமிருந்து பதவியைப் பெற்றுக் கொண்ட நபர் தனது கடமையை செய்யத் தயங்குகிறார். அதுதான் இங்குள்ள பிரச்சினையேயன்றி வேறில்லை.,

pmgg, nfgg பின்னால் த‌மிழ் ட‌ய‌ஸ்போரா உள்ள‌து என்ப‌து த‌மிழ் கூட்ட‌மைப்புட‌னான‌ 2013 ஒப்ப‌ந்த‌ம் தெளிவு ப‌டுத்துகிற‌து. இந்த‌ ஒப்ப‌ந்த‌த்தில் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் பிரிந்திருக்க‌ வேண்டும் என்ற‌ ஒரு வார்த்தையும் இல்லாமை மிக‌ப்பெரிய‌ காட்டிக்கொடுப்பாகும்.

Anvar, அநியாயமாக வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.

அஸ்மின் செய்த தவறுதான் தனது நளீமியா - ஜமாத்தே இஸ்லாமி நண்பர்களை வடக்கிற்கு கொண்டுவந்து TNA உடன் அறிமுகம் செய்து ஒப்பந்தம் பண்ணியது.

TNA அஸ்மினுக்கு அந்த ஆசனத்தை கொடுப்பது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தது. அஸ்மின் அவர்களுக்கும் TNA இற்கும் நேரத்துடனேயே தொடர்பு இருந்தது என்பதை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாங்கள் அறிவோம்.

தந்தை செல்வா நினைவுப் பேருரை 2012 இல் அஸ்மின் அவர்கள் உரை நிகழ்த்த TNA அவரை அழைத்து இருந்தது. அப்பொழுது இந்த GG காரர்கள் யாரும் அங்கே இல்லை.

அந்த ஆசனம் GG கார்களுக்கு சொந்தமானது அல்ல, யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு சொந்தமானது. சட்டத்தரணி இமாம் அவர்களுக்கு TNA தேசியப் பட்டியல் ஆசனம் கொடுத்த பொழுது GG கட்சிகள் என்ன சம்மந்தம்?

ஒப்பந்தத்தை ஒழுங்காக வாசியுங்கள், ஒப்பந்தம் செய்யபப்டுவதற்கு முன்னரே அஸ்மின் மன்னாரில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு விட்டார். அஸ்மின் தனது ஜமாத்தே இஸ்லாமி நண்பர்களை நம்பி யாழ்ப்பாணத்து முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மை.

காத்தான்குடியின் GG கட்சிகள் யாழ்ப்பாணத்து சோனக சமூகத்திற்கு TNA வழங்கிய போனஸ் ஆசனத்தை தங்கள் பரம்பரை சொத்து போன்று கருதுவது மிகவும் கவலையான விடயம். அஸ்மின் நல்லவரா, கெட்டவரா என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம், நீங்கள் உங்கள் காத்தான்குடி இரதேசத்தில் குப்பை அள்ளும் வேலையையும், ஹிஸ்புல்லாஹ்வை சமாளிக்கும் வேலையையும் பார்த்துக் கொள்ளுங்கள், அது போதும்.

Post a Comment