Header Ads



அமெரிக்க குடியுரிமையை நீக்கி, ஜனாதிபதியாக கோத்தா ரெடி, டிரம்பின் ஆதரவுபெற முயற்சி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கோத்தபாய இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி நடைபெற்ற மேதின பேரணியில், மஹிந்த அணிக்கு பெரும்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். இரண்டு பிரதான கட்சிகளையும் விட மஹிந்த தலைமையில் நடைபெற்ற பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இதன்காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த ராஜபக்ஷர்களி்ன் அரசியல் பயணம் பிரகாசமாக மாறியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு 2020ல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சிக்குள் ஆதரவு குறைந்து வருவதாகவும், சுதந்திர கட்சியை சேர்ந்த பலர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவது உறுதி என கோத்தபாய தரப்பு மதிப்பிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கூட்டு எதிர்க்கட்சியில் இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை. இருந்த போதிலும் மிகவும் தகுதியான வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் கோத்தபாயவே உள்ளார்.

இதேவேளை, அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தற்போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் அறிவிக்கப்பட்டாலும், சட்டரீதியனான செயற்பாட்டிற்கு இரண்டு மூன்று வருடங்கள் அவசியமாகும்.

அதற்கமைய, அந்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் அமெரிக்காவில் கோத்தபாயவுக்கு நெருக்கான வர்த்தகர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வரையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவன்கா ட்ரம்பிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் அரசியல் தொடர்பில் சீன அரசாங்கம் தீர்மானமிக்க அழுத்தம் ஒன்றை தற்போது வரையில் பிரயோகித்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவுக்கு நெருங்கிய தரப்பினர் இலங்கையில் செயற்பட வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாகும்.

இந்த விடயத்தை இவன்கா ட்ரம்பின் அவதானத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ச ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது சீனாவுடன் இலங்கை மிகவும் நெருக்கமாக செயற்பட்டமையே இதற்கான காரணமாகும்.

தற்போது மைத்திரி அரசாங்கத்திலும் இதே நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றமையால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு மேலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.