Header Ads



குழந்தையைத் தூக்கும், சரியான முறை எது..?

-குங்குமம் டாக்டர்- 

‘‘குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த கவனம் செலுத்தியே வருகிறார்கள். நேரம் தவறாமல் உணவு கொடுப்பது, அவர்களைத் தூங்க வைப்பது, காலம் தவறாமல் தடுப்பூசி போடுவது என்று பெற்றோரின் அர்ப்பணிப்பும், அன்பும் ஆச்சரியம் மிக்கது. இதேபோல், குழந்தைகளைக் கையாளும் விதத்திலும் சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது, குழந்தைகளைத் தூக்கும் முறை...’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஜெயகுமார்.‘‘குழந்தைகளைத் தூக்குவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. முக்கியமாக, பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுடைய கழுத்து எலும்பு, முதுகு தண்டுவடம், கை, கால் மூட்டு இணைப்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. மிக மிக மென்மையாக இருக்கும்.

பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.

தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம்.குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டுபோகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.

குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது. தோளில் வைத்திருக்கும்போது, குழந்தையின் வயிற்றுப்பகுதி அழுந்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தூக்கும்போது, தலை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆன பிறகுதான் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும்.அந்தச்சமயங்களில் குழந்தைகளைத் தூக்கும்போது இரண்டு கைகளால் அக்குள் பகுதியை பிடித்தவாறு தூக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு கையால் குழந்தையைத் தூக்கக் கூடாது. அதேபோல் குழந்தையை ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கவும் கூடாது.’’

1 comment:

  1. Good Article. But they cant say only Caring parents vaccine their kids. Even Many Doctors dont vaccine their kids . Its a debatable topic.

    ReplyDelete

Powered by Blogger.