Header Ads



உள்ளூராட்சி தேர்தலை, உடனே நடத்து - நாடு தழுவிய போராட்டத்திற்கு கு மஹிந்த அணி தயார்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்கு மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது.

பொது எதிரணி எம்.பிக்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன் திகதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பி ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள போதிலும் அவற்றுக்கான தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதியாக பதவி நீடிப்பு வழங்கப்பட்டு அவை ஆணையாளர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.

எல்லை நிர்ணயப் பணிகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாகவே தேர்தல் பிற்போடப்பட்டது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் முன்னர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொகுதிவாரியாகவா அல்லது புதிய தேர்தல் முறையிலா தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. பழைய முறைப்படி தேர்தல் நடத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன.

இந்த தேர்தலின் பின்னர் புதிய முறைமையை அறிமுகப்படுத்தலாம் எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த அணி பல வழிகளிலும் அரசை வலியுறுத்து வருகின்றது.

இந்த நிலையிலேயே நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்கு அது உத்தேசித்துள்ளது.

பொது எதிரணியின் (மஹிந்த அணியின்) மே தினக் கூட்டத்தில் மக்கள் அலை மோதியது. அரசு மீது மக்கள் கடும் சீற்றத்துடன் இருக்கின்றனர் என்பது இதன்மூலம் உறுதியானது.

எனவே, மக்களின் ஜனநாயக உரிமைகளுள் ஒன்றான உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு மக்களைக் கொண்டே அரசை வலியுறுத்தவுள்ளோம்.

இதற்காக எட்டுத்திக்கிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பி ரஞ்சித் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு தேர்தலையும் சந்திக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன் தினம் கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியாக நக்கட்டும். முஸ்லீம் அரசியல்வாதிகள், சற்று சிந்தித்து எல்லோரும் ஒன்றுசேர்த்து முடிவெடுத்தால் முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைத்துவிடும்.எனவே அல்லாஹுக்கா நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். நமது சமூகத்தைப் காப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.