Header Ads



இன்றும் சில நாட்கள், அவகாசம் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர் - சாகல ரத்னாயக்க

“நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர். பொதுமக்களின் நலனுக்காகச் செயற்பட அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை, இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுவோருக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்” என, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில், நேற்று (24) 23/2 இன் கீழ் கேள்விகளைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கைகள் குறித்த எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க இன்றும் சில நாட்கள் அவகாசம் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 

இன்னும் சில நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை வழங்குமாறு அவர்களிடம் நான் கேட்டுள்ளேன். 

நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவது பொலிஸார் மற்றும் அரசாங்கத்தின் கடமை. சில சம்பவங்கள் தொடர்பில் உடனடியாகச் செயற்படாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், சாதாரணமாக இடம்பெறும் சில சம்பவங்களும் இனவாதச் செயற்பாடுகளால் எற்படும் சம்பவங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. எனினும், இது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

No comments

Powered by Blogger.