Header Ads



இனவாத, தீவிரவாத சக்திகளுக்கு தலைகுனியாமல், சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துங்கள்

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு இந்த நாட்டின் சகல இன மக்களும் தமது அளப்பரிய பங்களிபபை வழங்கியுள்ளார்கள். அதே போல இனங்களுக்கிடையில் சமாதானமும் சகவாழ்வும் கடந்த கால யுத்தத்தினால் சீர்குலைந்துபோனது.    நிலைமை இவ்வாறியிருக்க குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சிறு குழுக்களாக இயங்கும் இனவாத கும்பல்கள்; நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆகவே, நல்லிணக்க செயற்பாடுகளை தகர்த்து நிர்மூலமாக்குவதற்கும் செயற்படுகின்ற இனவாதச சக்திகளை கட்டுப்படுத்தவும் காத்திரமான  நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று முஜீபுர் றஹ்மான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நேற்று 23ம் திகதி சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஆட்சிக்காலத்தில் இனங்கள் மத்தியில் இனவாதத்தையும், குரோதத்தையும் வளர்த்து அளுத்கமையில் இனக்கலவரத்தை தோற்றுவித்தார்கள். 

அந்த ஆட்சியிலிருந்து மீள்வதற்காகவே சகல இனமக்களும் இனமத பேதமின்றி வாக்களித்து 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிரிசேனவை வெற்றிபெற வைத்தோம். 

அன்று நாம் பெற்ற வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியாகும். ஊடக சுதந்திரத்தின் வெற்றியாகும். நீதித்துறையின் ஆதிக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அதுமட்டுமல்லாமல் இன தேசிய ஐக்கியத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். சமாதான சூழலை உருவாக்குவதற்கும் இந்நாட்டில் சகல இனங்களும் சமாதானமாகவும், சரிசமமாகவும் வாழ்வதற்கு  கிடைத்த வெற்றியாகும்.

இன்று இந்த சமாதான, நல்லிணக்க பயணத்தை சிதைப்பதற்கு வடக்கிலும் கிழக்கிலும் இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. கடந்த கால அராஜக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரங்களில் மோசமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தோல்வியடைந்த சக்திகள் மீண்டும் தலை தூக்கி பள்ளிவாசல்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் தீ வைத்து வருகின்றன. இவை மிகவும் கவலை தரும் விடயங்களாகும். மே மாதம் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த நாசகார சக்திகளின் பின்னணியில் இருப்போரை நாம் இனம்காண வேண்டும்.

2010 ஆண்டில் நாம் இழந்த ஜீஎஸ்பி வரிச் சலுகையை நாம் மீண்டும் பெற்றுள்ளோம். மீண்டும் சர்வதேசத்தின்  நம்பிக்கையை இழப்பதற்கு இடமளிக்க வேண்டாம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்க வேண்டாம். இந்நாட்டில் தேசிய ஒற்றுமையை இல்லாதொழிக்க, இந்நாட்டில் நல்லிணக்கத்தை இல்லாதொழிக்க இந்த இனவாத சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். 

இந்நாட்டை தீவைத்து நாசமாக்க இடமளிக்க வேண்டாம். நான் மீண்டும் கேட்கிறேன் இந்த இனவாத, தீவிரவாத சக்திகளுக்கு தலைகுனியாமல் இவர்களுக்கு எதிராக சட்டத்தை  உடனடியாக அமுல்படுத்துங்கள் என்றும் முஜீபுர் றஹ்மான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.