Header Ads



யாழ்ப்பாணத்தில் எல்லோரினதும், பங்களிப்புடனேயே மீலாத் விழா

-அதாஸ் முஹம்மத்-

கடந்த 20.12.2016 அன்று டொக்டர்களான  எம்.ஏ.சி.எம். ரம்ஸி, எம்.எஸ். ஹிஜாஸ், பட்டயக் கணக்காளர் எம்.எஸ்.எம்.ஜான்ஸின், தொழிலதிபர் அனீஸ் நௌஸாத், கவிஞர் யாழ் அஸீம் ஆசிரியர், சமூக சேவையாளர் அ. தையூப், ஐ.ரொக்கீஸ் போன்றவர்கள் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் ஹலீம் அவர்களை அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து 2017 க்கான மீலாத்   விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த சந்திப்பின் இணைப்பாளராக செயற்பட்டது, ஜப்னா முஸ்லிம் இணையத்தின் ஆசிரியர் அன்ஸிர் ஆவார்.

அதேவேளை அமைச்சர் றிஸாத் அவர்களும் மன்னாரில் மீலாத் விழாவை நடத்த வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக மன்னாருக்கு கோரப்பட்டிருந்த விழா கோரிக்கையை அமைச்சர் றிஸாத் அவர்கள் வாபஸ் வாங்கியதன் மூலம் யாழ் முஸ்லிம்களுக்கு  முன்னுரிமை அளித்துள்ளார். 

இந்நிலையில் விழாவை யாழ்ப்பாணத்தில் மட்டும் நடத்துவது என்ற அறிவிப்பை அமைச்சர் ஹலீம் அவர்கள் தெரியப்படுத்தினார். யுத்தத்தினாலும் வெளியேற்றத்தினாலும் அதன் பின்னர் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலைகளாலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் வீடுகள் உட்பட பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டிருந்தன. இதனால் மீள்குடியேற்றம் பாதிக்கப்பட்டதுடன் யாழில் மீள்குடியேறிய முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களையம் எதிர்நோக்கினர். மேலும் யாழ்ப்பாண முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த வடமாகாண சபையோ யாழ் பிரதேச செயலகமோ அல்லது மாவட்ட செயலகமோ காத்திரமான நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்காக விண்ணப்பித்த 2500 குடும்பங்களையும் இழுத்தடித்து அவர்கள் எவருக்கும் வீடுகளை திருத்துவதற்கான நிதி வழங்கப்படவில்லை. 

ஐந்து வருடங்களின் பின்னர் 2015 ஆம் ஆண்டு 50 குடும்பங்களுக்கும் 2016இல் 75 குடும்பங்களுக்கும் வீடமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. இன்னும் 94 விகிதமான மக்களுக்கான வீடமைப்பு உதவிகள் வழங்கப்படவேயில்லை. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு மேற்கொண்ட பதிவுகளை தொலைத்து விட்டதால் மீண்டும் பதிவுகளை வேண்டி யாழ் மாவட்ட செயலகம் மீள்பதிவுகளை மேற்கொண்டது.  2016 ஆகஸ்ட் 20 இல் மேற்கொள்ளப்பட்ட இந்த மீள்பதிவுகளில் 3200 குடும்பங்கள் விண்ணப்பித்தன. ஆனால் எட்டு மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தக் குடும்பத்துக்கும் சேதமடைந்த வீட்டுக்கான நஷ்டஈடு வழங்கப்படாதது வடமாகாண நிர்வாகத்தின் மீது மக்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.  

இந்தப் பிரச்சினைகளில் கனிசமானவற்றை தீர்ப்பதற்கு இந்த மீலாத் விழாவை பயன்படுத்தும் எண்ணத்தையே யாழ் மாவட்ட தேசிய மீலாத் குழு கொண்டுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது. இந்த விழாவை சகலரையும் ஒற்றுமைப் படுத்தும் ஒரு விழாவாக நடத்தவும் குழு திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகின்றது. 

அந்த  வகையில் அஸ்மின் ஐயூப் (வ.மா.உ), நியாஸ் ஹாஜியார், சுபியான் மௌலவி, அமீன் ஹாஜியார், அஜ்மல் மாஸ்டர், சட்டத்தரணி ரமீஸ், ஜினூஸ், அஸீஸ் மௌலவி, எம்.எ.சி முபீன், சியானாஸ் தாஹிர்,  சரபுல் அனாம், சுனீஸ், ஜமால் மொஹிதீன், முஜாஹித், கே.எம்.நிலாம், றியாஸ், நபாயிஸ், ஐ.எல்.லாபிர், ஜன்ஸீர், நளீர், மாஹிர், சிபான், ஆசிக் போன்றோரையும் மேலும் அர்ப்பணிப்புடன் ஒற்றுமையாக செயல்படக் கூடிய அனைவரையும் சேர்த்து ஒற்றுமை எனும் ஒரு குடையின் கீழ் செயல்பட தீர்மானித்துள்ளதாக அறியப்படுகின்றது. 

எனவே ஒவ்வொருவரும் தாங்கள் எந்தத்துறையில் பங்களிப்புச் செய்ய விரும்புகின்றீர்கள் என்ற விபரங்களை எழுதி ஒப்படைக்குமாறு மீலாத் குழு கேட்கவுள்ளது. குர்ஆன் போட்டிகள், கட்டுரைகள், கவிதைகள், உதைபந்து, கிறிகட், மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள், நூலாக்கம், வீதி அமைப்புகள், சிரமதானப் பணிகள், போன்ற பல்வேறு பணிகளை தலைமேல் எடுத்து சிறம்பட முடித்துக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது குழுவின் எதிர்பார்ப்பாகும் என அறியப்படுகின்றது. 

மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போதைய முன்னாள் அரசியல்வாதிகளும் சமூக சேவகர்களும் பாராட்டப்பட இருப்பதாகவும் தெரிகின்றது. மேலும் இந்நிகழ்ச்சிலை திறம்பட நடத்த செல்வந்தர்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயல்படும் சமூக சேவை அமைப்புகளினதும் உதவி பெறப்படுமெனவும் நம்பப்படுகின்றது. 

எனவே இந்த விழா ஒற்றுமையின் சிகரமாக இடம்பெறவும் இந்த விழா மூலம் மீள்குடியேற்றத்துக்கான தடைககள் நீங்க வேண்டுமெனவும் எல்லாம் வல்ல ரஹ்மானும் நம் அனைவரையும் சிருஷ்டித்த ரப்பாகிய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக! ஆமீன்

இதன் மற்றுமொரு சந்திப்பு 04.05.2017 அன்று முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கும்,  யாழ்ப்பாண மீலாத் விழா குழுவுக்கும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.