Header Ads



அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே..!

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கல்முனையில் செயற்பட்டு வரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் கிளை காரியலாயமும் அங்கிருந்து பறிபோகும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. தற்போது அதன் முகாமையாளராக கடமை புரியும் இப்றாகீம் பதவி உயர்வு என்ற போர்வையில் மாவட்ட மேலதிக முகாமையாளராக பதவி உயர்த்தப்பட்டு, சம்பள அதிகரிப்பு வாகனத்துடன் திருகோணமலைக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

இது ஒரு நல்ல சமிக்ஞை அல்ல.. ஒருவரைத் திருப்திப்படுத்தி பலரை ஏமாற்றும் ஒரு செயல் மட்டுமல்ல.. குறித்த அலுவலகத்தை அம்பாறை அலுவலகத்துடன் இணைக்கும் ஒரு முத்தாப்பு முயற்சி என்றே கருதலாம்.

வீடமைப்பு, வீடமைப்புக் கடன்கள், பழைய வீட்டுத் திட்டங்களை உரியவர்களுக்கு உரித்தாக்குதல், வீடமைப்பு பணிகளுக்கான சீமெந்து மற்றும் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தல் உட்பட பல நோக்கங்களுக்காகச் செயற்பட்டு வரும் இந்த நகரக் கிளையின் மூலம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட 12 பிரிவுகள் நன்மை அடைந்தன. இந்த நிலையிலே தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் கிளையின் முகாமையாளர் திடீரென பதவி உயர்வு என்ற அடிப்படையில் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்குள்ள ஊழியர் மிகுந்த வேதனையும் அச்சமும் அடைந்து காணப்படுகிறன்றனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட முகாமையாளருக்குப் பதிலீடாக ஒருவரை நியமிக்காத நிலையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளமை அந்த அலுவலகத்தை கல்முனையிலிருந்து அகற்றி அம்பாறையில் செயற்படும் அலுவலகத்துடன் இணைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள முகாமையாளர் இப்றாகீம், கல்முனை நகரக் கிளை அலுவலகத்தில் கடமையாற்றிய உதவி முகாமையாளரிடம் தனது பொறுப்புகளை வெறும் ஒப்புதலுக்காக ஒப்படைத்து விடடுச் சென்றுள்ளார்.

இதற்கு முன்னரும் இந்த அலுவலகத்தை அங்கிருந்த மாற்றுவதற்கு நான்கு தடவைகள் முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையிலேயே இப்போது இந்தத் திட்டம் வேறு விதத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முகாமையாளரின் பதவி உயர்வு, இடமாற்றம் என்பன மத்திய அரசின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் கொழும்பிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும். எனவே, இதன் பின்னணியில் எந்த அமைச்சர் உள்ளார் என்பதனை நான் கூறித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. அதுவும் குறித்த அலுவலகத்தை அம்பாறை நகரக் கிளையுடன் இணைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2003 ஆம் ஆண்டு அன்றைய அமைச்சரால் உருவாக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நகரக் கிளை காரியலாய திட்டத்தின் போது அதன் கிளை ஒன்று கல்முனையிலும் நிறுவப்பட்டது.

பின்னர் 2010 ஆம் ஆண்டு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற விமல் வீரவன்சவால் நகரக் கிளை காரியலாயங்கள் தொடர்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி கல்முனை நகரக் கிளைக்கு உரித்தான வாகனம் பறிக்கப்பட்டது. காசோலைகளுக்கு ஒப்பமிடும் அதிகாரம் அம்பாறைக் கிளைக்கே வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த நகரக் கிளை முற்றாக கல்முனையிலிருந்து அகற்றப்பட்டு அம்பாறைக்கு கொண்டு செல்லும் காய்நகர்த்தல்கள் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கும் விசேடமாக, அம்பாறை மாவட்டத்தில் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் உரித்தாகும். பல விடயங்களை தொடர்ந்து இழந்து வரும் கல்முனை இதனையும் இழக்க இடம்கொடுக்கக் கூடாது.

வந்த பின்பு பார்ப்போம் என்ற வழமையான பாணிலிருந்து நீங்கி வரும் முன்னர் காப்பதே இன்றைய தேவையாகும். எனவே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே இந்த விடயத்தில் உங்களது இடது கண்ணையாவது திறந்து இதனைக் காப்பாற்ற முயற்சிகளை உடன் மேற்கொள்ளுங்கள் 

No comments

Powered by Blogger.