Header Ads



‘லலித் அத்துலத் முதலி படுகொலை - முழு உண்மை’ நூல் வெளியாகிறது

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான லலித் அத்துலத்முதலியின் படுகொலை பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த லலித் அத்துலத் முதலி, ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தில் பதில் பாதுகாப்பு மற்றும் தேசிய பந்தோபஸ்து அமைச்சராகப் பதவி வகித்தவர்.

முதலாம் கட்ட ஈழப்போரை ஒடுக்குவதில் முன்னின்று செயற்பட்ட இவர் பின்னர், ரணசிங்க பிரேமதாசவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, ஐதேகவில் இருந்து வெளியேற ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கினார்.

1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், லலித் அத்துலத் முதலில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதேவேளை, அப்போதை அதிபர் பிரேமதாச மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த நிலையில், ‘லலித்  அத்துலத்முதலி படுகொலை – முழு உண்மை’ என்ற தலைப்பிலான நூல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

தடயவியல் நிபுணர் ரவீந்திர பெர்னான்டோ இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூலில், லலித் அத்துலத் முதலியின் படுகொலை தொடர்பாக ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையும் இடம்பெற்றுள்ளது.

நாளை பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில், சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய இந்த நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.