Header Ads



முஸ்லிம்கள் அச்சத்துடன் உள்ளனர், வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும் - அநுரகுமார

இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இடமளிக்க முடியாது” என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. 

ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, நிலையியல் கட்டளையின் கீழ், கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

“இனவாதச் செயற்பாடுகளை மீண்டும் தூண்டும் வகையிலான செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. 

“சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதம், மதவாத்தை தூண்டும் வகையில் சிலரால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

“30 வருடங்களாக, இந்த நாட்டு மக்கள் போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மீண்டும் அவ்வாறான நிலைக்கு இடமளிக்க முடியாது.  

“அண்மைய காலங்களில் இடம்பெறும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. வில்பத்து விவகாரம், தொல்பொருள் இடங்கள் அழிக்கப்படுகின்றமை, முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் ஆகியவை தொடர்பில், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

“நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும் நிறுவனங்கள் இருந்தாலும் அவையும் இதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனங்கள் தமது கடமையை செய்ய தவறும் பட்சத்தில் தங்களது பிரச்சினைக்குத் தீரவுக்காண்பதற்கு பொதுமக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். 

1 comment:

  1. அப்பாடா நாங்களும் எங்கடா தலைய காணல,நீங்களுமா இனவாதிகளுடன் சேர்த்துவிடீர்களன ஏக்கத்துடனமிருந்தோம். நாங்கள் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.நம் நாட்டில் நல்ல அதிகமான சிங்களவர்கள்/பௌத்தர்கள் இறக்கிறதத்தால்தான் நம் நாடு இன்னும் அமைதியாக இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.