Header Ads



ஹமாஸின் புதிய தலைவர், அடுத்த சில தினங்களில் அறிவிப்பு


பலஸ்தீன இஸ்லாமிய போராட்ட குழுவான ஹமாஸ் அடுத்த சில தினங்களில் புதிய தலைவரை அறிவிக்க இருப்பதாக அந்த அமைப்பின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அதன் மாற்றத்திற்கு உள்ளான புதிய சாசனமும் வெளியிடப்படவுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் உள்மட்ட தேர்தலின் முடிவுகள் அடுத்து வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று அண்மைக்காலம் வரை காசாவுக்கான ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மைல் ஹனியான் குறிப்பிட்டார்.

மே 15 ஆம் திகதிக்கு முன் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

வெளியேறிய நிலையில் கட்டாரில் வாழ்ந்து வரும் காலித் மிஷாலுக்கு பதில் ஹமாஸின் புதிய தலைவராக ஹனியான் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பலஸ்தீன காசா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு ஜனாதிபதி அப்பாஸின் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை உள்ளது.

கட்டாரில் ஹமாஸ் வெளியிடவிருக்கும் புதிய சாசனத்தில் 1967 ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளைக் கொண்ட பலஸ்தீன தேசத்தை ஹமாஸ் ஏற்கவுள்ளது.

ஹமாஸ் அமைப்பு தன் மீதான சர்வதேச தனிமைப்படுத்தலை தளர்த்தும் முயற்சியாக இந்த கொள்கை மாற்றத்தை அறிவிக்கவிருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹமாஸின் முதல் சாசனம் கைவிடப்படாது என்பதோடு அது இஸ்ரேலை தொடர்ந்து அங்கீகரிக்காது என சர்வதேசத்தை கோருகிறது. 

No comments

Powered by Blogger.