Header Ads



தொடரும் அச்சுறுத்தல்கள், உணர்த்துவதென்ன..?

முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தினுள் மாத்திரம் இவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

இவற்றுள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு, முஸ்லிம் எல்லைக் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சுக்கள் என பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இருந்த போதிலும் இவை தொடர்பில் இதுவரை ஒரு நபர் கூட கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகவே நாட்டின் சட்ட வரம்பை மீறுபவையாகும். எனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற நிலையிலேயே நாட்டின் பாதுகாப்புத் தரப்பினரும் ஆட்சியாளர்களும் இருப்பது துரதிஷ்டவசமானதாகும்.

சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களுக்கு ஒரு தேரரும் அவர் தலைமையிலான சிறு குழுவினரும் அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள் என்றால், அவர்களை இந்த அரசாங்கத்தினாலும் முப்படையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த தேசத்துக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்?

உலகுக்கே மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழித்து நேற்றுடன் 8 வருட பூர்த்தி நினைவு கூரப்பட்டது. அதனை பலரும் நேற்றுக் கொண்டாடினார்கள். ஆனால் அதே நாளில் முஸ்லிம்கள் தாம் இந்த நாட்டில் ஒரு பாதுகாப்பற்ற சமூகமாக உணர்கிறார்கள் என்றால்  இதனை என்னவென்று சொல்வது?

இலங்கை அரசாங்கமானது தனது ஆளுகையின் கீழ் வரும் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக இலங்கையிலுள்ள காடுகளில் வாழுகின்ற  ஜீவராசிகள் மீது அரசாங்கம் காட்டுகின்ற அக்கறையில் ஒரு துளியைக் கூட அதன் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் மீது அல்லது சிறுபான்மை மக்கள் மீது காட்டவில்லை என்றால்  இந்த நாட்டின் ஜனாநாயகத்திற்கும் இறைமைக்கும் எந்தவித மதிப்பையும் எம்மால் வழங்க முடியாது.

எனவேதான் அரசாங்கம் இதுவிடயத்தில் தனது இரட்டை வேடத்தைக் களைய வேண்டும். கட்சி அரசியலுக்காகவும் வாக்கு அரசியலுக்காகவும் முஸ்லிம்களின் இருப்பிலும் உயிர்களிலும் உடைமைகளிலும் விளையாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் பேச வேண்டும் என நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய 21 எம்.பி.க்களும் வெறும் அறிக்கைகளுடனும் வீராப்புப் பேச்சுக்களுடனுமே தமது கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.

மாறாக தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான திராணி எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. 


முஸ்லிம் சமூகத்திலிருந்து முஸ்லிம் எம்.பி.க்களுக்கு எதிரான போராட்டம் மேலெழாதவரை இந்தப் பிரச்சினைகள் முற்றுப் பெறப் போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.

விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

No comments

Powered by Blogger.