Header Ads



"வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கும் வகையில், அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதே நடைமுறைச் சாத்தியமான, நீதியான தீர்வாக அமையும்"

'வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வானது, அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் சமத்துவமான  நீதியினை வழங்குவதாக அமைய வேண்டும். அதேவேளை சாத்தியப்படுத்த தக்க ஒன்றாகவும் அரசியல் தீர்வு முன் மொழிவுகள் இருக்க வேண்டும. வடக்கும் கிழக்கும் தனித்தனியான மாகாணங்களாக இருக்கும் வகையில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதன் மூலமே இதனை உறுதி செய்ய முடியும்.' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமது நிலைப்பாட்டை மீள வலியுறுத்தும் வகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

"அரசியல் தீர்வென்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லது அரசியல் கட்சிகளுக்கான தீர்வாக அல்லாமல், மக்களுக்கான தீர்வாக அமைய வேண்டும். வழங்கப்படும் தீர்வானது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொடுப்பதோடு, அது சகல இன மக்களுக்கும் நியாயமானதாகவும் சமத்துவமானதாகவும் இருக்க வேண்டும்.  

எந்தவொரு சமூகமும் தமது சனத்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில், அடுத்த சமூகங்களின் மீது அத்துமீறல் செய்வதனையோ அல்லது அநீதி இழைப்பதனையோ அனுமதிக்க முடியாது. மேலும், ஒவ்வொரு சமூகங்களினதும் அரசியல், மத, கலாசார, மொழித் தனித்துவங்களையும் அடையாளங்களையும் மற்றும் பாரம்பரிய வாழ்விடங்களையும் அங்கீகரித்துப் பாதுகாக்கும் வகையிலுமே அரசியல் தீர்வானது அமைய வேண்டும்.

அந்த வகையில், வட கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான தீர்வு பற்றிப் பேசப்படும் போது, தமிழ் அரசியல் தரப்புகளினால் வடக்கு கிழக்கு இணைக்கப்படல் வேண்டும்  என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. கிழக்கை வடக்குடன் இணைக்காமலேயே, அங்குள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். ஆனால், கிழக்கை வடக்குடன் இணைப்பதன் மூலமாக கிழக்கு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை. 

மேலும், அரசியல் தீர்வென்பது சமத்துவமானதாக இருக்க வேண்டும் என்பது போலவே, சாத்தியமானதொன்றாக அதனை மாற்றுவதும் அனைவரினதும் கடமையாகும். அந்த வகையில், நிலவும் யதார்த்தங்களின் அடிப்படையில் நோக்கும் போது, அரசியல் தீர்வுக்கான முன் நிபந்தனையாக வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்துவதானது, தீர்வு முன்மொழிவுகளை சாத்தியமற்றதாக்கி விடும் என்ற அபாயத்தைக் கொண்டிருக்கிறது. 

எனவே, வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாகப் பேணும் வகையில், அதிகாரப் பகிர்வனை செய்வதே தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கு சமத்துவமான, நீதியான தீர்வினை வழங்குவதற்கான வழிமுறையாகும். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே , கிழக்கு மக்களின் சம்மதமின்றி வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெற முடியாது என்பதனையும் தெரிவித்திருந்தோம்.

எமது இந்த நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளோடு நாம் நடாத்திய கலந்துரையாடல்களின் போது மிகத் தெளிவாக முன்வைத்துள்ளோம். குறிப்பாக , கடந்த 16.02.2016 அன்று எதிர்க்கட்சித்தலைவரின் உத்தியோகபூர்வ காரியாலாயத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்களுடன் அதன் சிரேஷ்ட பிரதிநிதி ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சுமந்திரன் (பா.உ) அவர்களுடனும்  நடைபெற்ற சந்திப்பின் போதும், அதன் பின்னர் இரு வேறு சந்தர்ப்பங்களில் இடம் பெற்ற சந்திப்புகளின்போதும் எமது நிலைப்பாடுகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். எமது நியாயங்களை அவர்களும் புரிந்து கொண்டுள்ளார்கள். அதன் பிரதிபலிப்பாகவே கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு முரணாக வடக்கு கிழக்கை இணைக்க முடியாதென்ற கருத்தினையும் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்திற்கு அநீதியிழைக்கும் வகையில் இறுதித்தீர்வானது அமைய முடியாது எனவும் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்கள் என நம்புகின்றோம்.


நல்லாட்சிக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியற் கட்சி என்ற வகையில், சமத்துவமான நீதியினையே நாம் எல்லா விடயங்களிலும் வலியுறுத்துகின்றோம். அந்தப் பின்புலத்தில், வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வென்பது தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு சமத்துவமான நீதியை வழங்குவதாகவும் அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமான ஒன்றாகவும் அமைய வேண்டும் என்றால், வடக்கும் கிழக்கும் தனித்தனியான அலகுகளாக இருக்கும் வகையிலேயே முறையான அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும்."

இவ்வாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.