Header Ads



மகிந்தவிற்கு பயமென்றால், வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளட்டும் - பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பயமிருந்தால் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு படுத்துறங்க வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சால்வையில் தொங்க விட்டு கொன்று விடுவேன் என்ற அச்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருக்கின்றார்.

நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுவதால் அவருக்கு 200, 300 பேரை பாதுகாப்புக்காக வழங்க தேவையில்லை. அவரது பாதுகாப்புக்கு 100 பேரை கூட வழங்கக் கூடாது.

மகிந்த ராஜபக்ச என்னை பிடித்து சிறையில் அடைத்தார். முன்னாள் இராணுவ தளபதியான எனக்கு பாதுகாப்பு வழங்கினாரா? எந்த பாதுகாப்பும் இல்லாமல் பயங்கரவாதிகள் இருக்கும் சிறையில் என்னை அடைத்தனர்.

இப்படியான வேலைகளை செய்தவருக்கு தனது பாதுகாப்பு குறித்து பேச தார்மீக உரிமை கிடையாது. மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து பேசும், சத்தமிடும் அவரது அடிவருடிகள் அந்த காலத்தில் எனது பாதுகாப்பு பற்றி பேசவில்லை.

முன்னாள் ஜனாதிபதிக்கு யாரிடம் அச்சுறுத்தல் இருக்கின்றது. அதனை அரசாங்கமும் புலனாய்வுப் பிரிவும்தான் தீர்மானிக்கும். அவர் செய்த தவறுகள் கண்ணாடிக்கு முன்னால் சென்று பார்க்கும் போது தெரிகின்றது போலும்.

அந்த தவறுகள் தம்மை திருப்பி தாக்குமே என்ற அச்சம் இருக்கலாம். பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு 60 பேரின் பாதுகாப்பே வழங்கப்படுகிறது.

விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அதே பாதுகாப்புதான் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.