Header Ads



மதுபான உற்பத்தி தொழிற்சாலை, நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்து!

-M.T.M.பர்ஸான்-

முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா தேர்தல் தொகுதியில், கும்புறுமூலை எனும் பிரதேசத்தில், 19 ஏக்கர் நிலப்பரப்பில், 450 கோடி பஜ்ஜட் செலவில், 100 சதவிகிதம் வரிவிலக்களிக்கப்பட்டு, அரசியல் வாதிகளின் பின்புலத்துடனும், அரசின் பூரண அங்கீகாரத்துடனும் நிர்மாணிக்கப்பட்டு வரும் மக்கள் நலனிற்கு எதிரான கட்டடமே ‘WM Mendis & Company மதுபான உற்பத்தி தொழிற் சாலை’ என்பது நாடறிந்த உண்மை.
குடிப்பாவனையில் உலகளவில் இலங்கை 4 வது இடத்தை பிடித்திருக்கும் அபாய நிலையில், மது மற்றும் புகை பழக்கத்தினால் இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 7875 நபர்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை தற்போதைய ஜனாதிபதியவர்கள் முன்னால் சுகாதார அமைச்சராக இருக்கும் போதே அறிவித்திருக்கும் போது, இலங்கையில் அதிகூடியளவில் மதுபானம் அருந்தப்படும் பகுதிகளான நுவரெலியா, யாழ்ப்பானம் எனும் ஊர்களுக்கு அடுத்த படியாக மட்டக்களப்பு மாவட்டமே முன்னணியில் திகழ்கிறது என்று மாண்புமிகு ஜனாதிபதியவர்களே மனமுடைந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றியிருக்கும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் ஒரு மாதத்தில் 41 கோடி 36 இலட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபாய்கள் மதுவிற்காக மக்களால் செலவிடப்படுகின்றது எனும் பேரிடியாய் அமைந்த புள்ளிவிபரத்தை மண்முனை வடக்கு மகளிர் அமைப்புகளின் சம்மேளனம் அறிக்கையாய் விட்டிருப்பதை அரசு முழுமையாய் அறிந்தும் கூட இப்பாரிய மதுபான உற்பத்தி தொழிற்சாலை நிர்மாணப்பணிகளுக்கு அரசே முன்னின்று அனுமதி வழங்கியிருப்பதானது நல்லாட்சியின் மக்கள் நலனில் அக்கறையற்ற, பொறுப்புணர்வற்ற தன்மையினையே எடுத்துக் காட்டுகிறது. 
சட்டப்படி நோக்கின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மதுபானச் சாலைகளே காணப்பட முடியும். என்றாலும், தற்போது 58 மதுபானச் சாலைகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளதோடு, சுற்றுளாத்துறை விடுதிகளில் அனுமதியின்றி ஏரத்தாள 34 மதுபானச் சாலைகள் திறக்கப்பட்டுமுள்ளன. இருக்கும் சீரழிவு போதாது என்று தற்போது மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழிற்சாலை வேறு 450 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றமை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வை பாழ்ப்படுத்துமே தவிர மேம்படுத்த மாட்டாது. மக்களின் நல்வாழ்வை நாசப்படுத்தும் இது போன்ற மதுபானச் சாலை நிர்மானப்பணிகளுக்கு அரசு சட்டரீதியான அனுமதி கொடுப்பதன் இரகசியம் என்ன? மதுபானச் சாலைகள் ஊடாக கோடிக்கணக்கில் அரசு ஈட்டும் வருமானத்திற்காக குடிமக்கள் குடியினால் குட்டிச்சுவராகிப்போனாலும் பரவாயில்லை என்கிற அரசின் மனப்பதிவு சுயநலமும், பச்சை அயோக்கியத்தனமும் மிக்கதாகும். ஒருபுறம் மதுவை ஒழிப்பது போன்று நாடகமாடி மறுபுறம் மதுப்பிரியர்களை அதிகரிக்க வழிவகை செய்யும் நல்லாட்சி(?)யின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் வருகையினால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கவுள்ள பாதிப்புகளும், இழப்புகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. மது பாவனையுள்ள சமூகத்தில் பண்பாடு, ஒழுக்க, கலாசார சீரழிவுகள் பெருகும். கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படும். குடும்பத் தகராருகள் அதிகரித்து விவாகரத்துகள் கூடும். இதனால் அனாதரவான பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கற்பழிப்புகள், கொலைகள், வீண் சண்டைகள் என்பன பெருகும். சுற்றுளா பயணிகளின் வருகை அதிகரிப்பதால் விபச்சாரம் கலைகட்டும். கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு, பெண்கள் பணம் தேடி வெளிநாடு செல்லும் இழி நிலை கூடும். சுமுகமான குடும்ப, சமூக உறவுகளுக்கிடையில் விரிசல்களும், பகைமைகளும் ஏற்பட்டு பிளவுகள் அதிகரிக்கும். மன அழுத்தம், மன விரக்தி, நிம்மதியற்ற நிலை என்பன அதிகரித்து மனநோயாளிகளினதும், தற்கொலையை நாடுவோரினதும் எண்ணிக்கை கூடும். மேலும், போதையுற்ற நிலையில் வாகனங்கள் செலுத்த முற்படுவதனால் வீதி விபத்துக்கள் பெருகும். இதனால் உயிர்ப்பலிகள் அதிகரிக்கும். மேற்குறிப்பிட்ட சமூக கலாச்சார சீரழிவுகளுடன் இணைந்து, பார்வை கோளாறு, ஞாபக மறதி, கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டல தளர்ச்சி, கை - கால் நடுக்கம், மூளை பாதிப்பு, வயிற்றுப் புண், வாய் - தொண்டை புற்றுநோய், கணைய அழற்சி உள்ளிட்ட ஏராளமான ஆரோக்கியக் கோளாறுகளும், நோய்களும் சமூகத்தில் வியாபிக்கும். தற்போதைய புள்ளி விபரப்படி இலங்கையில் அதிக புற்று நோயாளிகள் உள்ள மாவட்டத்தில் முதலிடம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே கிடைத்துள்ளமை ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சமூகப் பிரச்சினையாகும்.
இம்மதுபான தொழிற்சாலை நிர்மாணத்தினால் சமூக, கலாச்சார, ஆரோக்கிய சீர்கேடுகள் விளைவது போன்றே சூழலியல் பிரச்சினைகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் கூட அதிகரிக்க வாய்ப்புண்டு. குறிப்பாக, இத்தொழிற்சாலையானது  Based Extra Neutral Alcohol (ENA)  எனும் மதுபானத்தை உற்பத்திசெய்யவுள்ளதாக அறியமுடிகிறது. இதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நீர் நிலைகளுடன் கலப்பதனால் நீர் மாசடைவதுடன், மீன் வகைகள் கூட இறப்பதற்கும் காரணமாக அமைந்துவிடும். அத்துடன் வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாக விவசாயத்துறையும் பாதிப்படையும். 
மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிரதான மூலப்பொருளாக அரிசியே அமையவுள்ளது. இதற்காக வேண்டி பல்லாயிரக்கணக்கான தொன் அரிசி கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்படும். இதனால் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருமானத்தில் அடிமட்டத்திலுள்ள பொது மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகும். அத்தோடு, மதுபான உற்பத்திக்கென பில்லியன் கணக்கிலான லீட்டர்கள் நீர் இம்மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அவசியப்படும். இப்பாரியளவிலான நீர் கொள்வனவானது குறிப்பிட்ட பிரதேசத்தில் நிலவும் வரட்சியான காலப்பகுதியில் பாரிய நீர்த்தட்டுப்பாட்டை தோற்றுவிக்கும். இதனால் மக்கள் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடும்.
மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளுக்கு கோரளைப்பற்று பிரதேச சபை அனுமதி கொடுக்க மறுத்துள்ள போதிலும் குறித்த தொழிற்சாலை தனது நிர்மாணப்பணிகளை முன்னெடுத்தவண்ணமே உள்ளது. அத்தோடு, நிர்மாணப் பணிகளை பார்வையிடச் சென்ற இரு பிராந்திய ஊடகவியலாளர்கள் கூட குறிப்பிட்ட மது பான தொழிற்சாலை நிறுவனத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டுமுள்ளார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகும். இந்தளவுக்கு இந்நிறுவனத்தினர் ஆட்டம் போடுகிறார்கள் என்றால் இவர்களுக்குப் பின்புலத்தில் நிச்சயம் கொழுத்த பண முதலைகளினதும், அதிகார வர்க்கத்தினரினதும் மறைகரம் உண்டு என்பது வெள்ளிடை மலை. 
கலாச்சார சீரழிவுகளையும், ஆரோக்கிய கேடுகளையும், சூழலியல் பாதிப்புகளையும், வாழ்வியல் பிரச்சினைகளையும் விளைவிக்கும் இது போன்ற மதுபானச் சாலைகளை அரசு தராதரம் பாராது உடன் தடை செய்ய வேண்டும். குறிப்பாக மெண்டிஸ் மதுபான தொழிற்சாலை உடன் அமுலுக்கு வரும் விதத்தில் அதன் கட்டுமானப்பணிகள் முடக்கப்படல் வேண்டும். அதற்கான அனுமதி ரத்து செய்யப்படல் வேண்டும். கோடியாய் கிடைக்கும் இலாபத்தை கருத்தில் கொள்ளாது கேடாய் அமையப் போகும் மக்கள் வாழ்வை கருத்தில் கொண்டு மைத்திரி - ரணிலின் கூட்டாட்சி குறிப்பிட்ட மதுபானச் சாலை நிர்மாணப்பணிகளுக்கு நிரந்தர தடையுத்தரவை விரைவாக இட்டு, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்குமாறு அனைத்து இன - மத மக்கள் சார்பாகவும் நாம் குரலெழுப்ப வேண்டும்.
ஒன்றுபடுவோம்! ஓரணியில் திரள்வோம்! மதுப் பாவனையற்ற மாவட்டமாய் மட்டக்களப்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த இலங்கையையும் மாற்ற இன - மத பேதமின்றி உழைப்போம்!

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

1 comment:

  1. இவ்வாறான சமூகச் சீர்கேடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற நல்லாட்சியாலோ அன்றி பொல்லாட்சியாலோ முடியாது. இறையாட்சிதான் தீர்வு.

    அந்த இறைவனைப் பற்றியும் அவனது ஆட்சியிலுள்ள நீதியைப் பற்றியும் அனைத்து மக்களதும் அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்:

    " மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. "
    (அல்குர்ஆன் : 13:3)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.