Header Ads



பொன்சேக்கா விவகாரம், பாராளுமன்றத்தில் ரணில் வழங்கிய விளக்கம்..!

அமைச்சரவையில் பேசப்பட்ட விடயங்களை தன்னால் பகிரங்கமாக சொல்லமுடியாது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட இராணுவமொன்றை உருவாக்க வேண்டிய எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஒட்டுமொத்த படைத்தளபதியாக நியமிப்பதற்கான தீர்மானம் எதுவும் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில், நேற்று (03) இடம்பெற்ற பிரதமரிடம் கேளுங்கள், நேரத்தின் போது, ஜே.வி.பி. எம்.பி.யான விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எது, எவ்வாறாக இருப்பினும், சரத் பொன்சேகாவை ஒட்டுமொத்த படைத்தளபதியாக நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவைக்கு யோசனை எதுவும் முன்வைக்கப்பட்டதா அல்லது இல்லையா அல்லது அவ்வாறான விடயங்கள் எதுவும் அங்கு பேசப்பட்டதா என்பது தொடர்பில் கருத்துக்கள் எதையும் வெளியிடுவதற்கு, பிரமர் மறுத்துவிட்டார். அரசியலமைப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு ஆகியவற்றை  காரணம் காட்டியே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட விவகாரங்களுக்க நேரடியான பதிலை வழங்குவதற்கு இதன்போது மறுத்துவிட்டார். முன்னதாக கேள்விகளை கேட்ட விஜித ஹேரத் எம்.பி,  சரத் பொன்சேகாவை ஒட்டுமொத்த படைத்தளபதியாக நியமிக்க ஜனாதிபதி சிறிசேன, அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைத்ததாக அமைச்சரவை இணை பேச்சாளரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அதுவும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவற்றை தெரிவித்திருக்கின்றார். அவ்வாறான தீர்மானம் எதுவும் அமைச்சரவையில் எடுக்கப்பட்டதா என்று வினவினார். இதற்கு பதிலளித்த பிரதமர் விக்கிரமசிங்கÉ தற்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகிக்கும் சரத் பொன்சேகா, இராணுவ தளபதியாகவும் அதேபோல் கூட்டுப்படைகளின் பிரதானியாகவும் பதவிகளை வகித்திருநதார். அவரது திறமைகளை அமைச்சரவையில் மட்டுமல்லாது, அதற்கு வெளியிலும் ஜனாதிபதி சிறிசேன பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பாராட்டியிருக்கின்றார் என்றார்.  'இந்நிலையில், சரத் பொன்சேகாவை படைகளின் பிரதானியாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையினால் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டுப்படைகளின் பிரதானி பதவிக்கு ஒருவரை நியமிப்பது என்றால் அதற்கான சட்டத்தின் பிரகாரமே அதை செய்ய வேண்டும். சட்டத்துக்கு அமையவே நாம் செயற்படுவோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி சிறிசேனவே இருக்கிறார். அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலேயே அமைச்சரவையில் பேசப்பட்டது' என்று குறிப்பிட்டார். இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு சரத் பொன்சேகா தகுதியானர் என்பதனாலேயே 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவரை பொது வேட்பாளராக நின்றார். அவருக்கு, ஜே.வி.பி.யும் ஆதரவளித்திருந்ததாகவும் குறிப்பிட்டார். குறுக்கிட்ட, விஜித ஹேரத் எம்.பி, இது நபர் தொடர்பான பிரச்சினை கிடையாது. இது கொள்கை தொடர்பான பிரச்சினையாகும். சரத் பொன்சேகாவை ஒட்டுமொத்த படைத்தளபதியாக நியமிக்கும் யோசனை எதையும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தாரா என்றும் மீண்டும் கேள்வி எழுப்பினார். எனினும், அமைச்சரவையினால் அவ்வாறான 'தீர்மானம்' எதுவும் எடுக்கப்படவில்லை என்று மீண்டும் தெரிவித்த பிரதமர், எவ்வாறிருப்பினும், அமைச்சரவையில் பேசப்பட்ட விடயங்களை தம்மால் கூற முடியாது என்றும் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்பட்டிருந்தால் அதுபற்றி மட்டுமே தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார். 'அரசியலமைப்பின் 49(2) ஆம் சரத்தின் பிரகாரமே நான் இந்த சபையில் பதிலளிக்கிறேன். அதற்கு அப்பால் என்னால் செல்ல முடியாது. ஜனாதிபதியோ அல்லது நானோ அமைச்சரவையில் என்ன பேசினோம் என்று என்னால் சொல்ல முடியாது. இறுதி தீர்மானம் பற்றி மட்டுமே தெரிவிக்க முடியும். ஏனெனில், அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. கூட்டுப்படைகளின் பிரதானி சட்டத்தின் பிரகாரமே அப்பதவிக்கு ஒருவரை நியமிக்க முடியும். உண்மையில், அத்தியாவசிய சேவைகளை எப்படி செயற்படுத்துவது என்பது தொடர்பில் தான் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டது' என்று அவர் கூறினார். 'விசேட இராணுவமொன்றை உருவாக்குவதற்கான தேவை எதுவும் எமக்கு கிடையாது. அது பற்றி பேசப்படவுமில்லை. இலங்கையில் இராணுவமொன்று இருக்கிறது. நாட்டின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பின் நிமித்தமே நாம் அதை பயன்படுத்துகிறோம். ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும். அதிலிருந்து நாம் விலகிச் செல்லவில்லை' என்றும் பிரதமர் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார். இதேநேரம், அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறிய விடயங்களை, அவருடைய வசனங்களின் மூலமாக அவரிடமே கேட்டால் தெளிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.     

No comments

Powered by Blogger.