Header Ads



நான்தான் உண்மையான இலங்கையன், உங்களில் யாராவது ஒரு சதமேனும் திருடவில்லை என கூறமுடியுமா..?

‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது.

ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ்ப் பதம் பயன்படுத்தப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘Unitary State’ என்ற ஆங்கிலப் பதத்தினையும் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.

Unitary State என்ற ஆங்கிலப் பதம், நாட்டின் சுபாவத்தைக் குறிக்குமே தவிர ஆட்சிமுறையைக் குறிக்காது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆகையால், ஆங்கிலப் பதம் பயன்படுத்துவதால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்பதையும் அவர்கள் விளங்கப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், சர்வதேசத்தின் தாளத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆடுவதாக அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தன் ஐயா, “உங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்” என்று கடுந்தொனியில் தெரிவித்துள்ளார்.

இதனை அவதானித்துக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “சம்பந்தன் அவர்கள் முதலாவது சுதந்திர தின நிகழ்விலேயே கலந்துகொண்டவர்” எனக் குறிக்கிட்டிருக்கிறார். “நான் அந்த அடிப்படையில் இதனைக் கூறவில்லை. இந்த நாட்டில் ஒரு சதமேனும் நான் களவாடவில்லை. ஆனால் உங்களில் யாராவது இதனைத் தைரியமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படியில்லையாயின் நான்தான் உண்மையான இலங்கையன்” என்று, சம்பந்தன் ஐயா, பதிலடி கொடுத்துள்ளார்.

சம்பந்தன் ஐயாவின் இச்சவாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்ப, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் அங்கம் வகித்த எவரும் ஏற்றுக்கொள்ள முடியாமல் சங்கடத்துக்குள்ளாகினார்கள் எனவும் நம்பகரமாகத் தெரியவருகிறது.

அதனைத் தொடர்ந்து, “நாட்டைப் பிரிவுபடுத்தாத, பிளவுபடாத, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான பூரண அதிகாரங்கள் உட்பட அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அரசியலமைப்புக் கவுன்ஸில் இணக்கப்பாடு கண்டுள்ளது. இதனை நாடாளுமன்றப் பெரும்பான்மை மற்றும் மக்கள் ஆணையைக் கொண்டு நிறைவேற்றுவோம். ஆகையால், பெயர் பற்றிய விடயங்களில் பின்னர் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்கப் பயணம் முடிவடைந்து இலங்கை திரும்பியதும், தேர்தல்கள் முறைமை மற்றும் நிறைவேற்று அதிகார முறைமை பற்றிய தீர்மானம் எட்டப்பட்டு, உத்தேச அறிக்கை வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.