May 01, 2017

ஒரு முறை இறந்து பார்க்கலாம்....?

-Abdul Razak-

தலைப்பை பார்த்தவுடன்
பாதிபேர் ஓடியிருப்பார்கள் 
மீதிபேர் ஒரு மெல்லிய தயக்கத்துடன் படிக்க ஆரம்பிப்பார்கள், 
என்ன இருந்தாலும் 
இறப்பு இல்லையா, கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்!
ஒருவேளை அப்படி இறந்துவிட்டால் என்னவாகிடப்போகிறது..?
அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி 
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
யாரோ மனோதிடம் கொண்ட உறவொன்று நாடியை கட்டி,கால் விரல்களை கட்டி ஒரு வெள்ளைப் புடவையால் போர்த்தி கிடத்தி வைப்பார்கள்.
இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள், இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், #அவ்வளவுதான்_நம்_வீட்டின_மீதுள்ள_உரிமை.
ஆளுக்கொரு பக்கம் 
மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது, அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம் ஆனால்
எதுவுமே முடியாது
அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்! 
#அவ்வளவுதான்_உறவுகள்
சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன, 
இவ்வளவு நாள் பேசாதவங்க,வீட்டு பக்கமே வராதவங்க எல்லாம் வருவாங்க.
பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள்.
யாரோ வருவார்,"#மையித்த "குளிப்பாட்டுவோம், என்பார்.இனி நம் பெயர் அது தானே!
மொடர்ன் பாத் டப்பில் குளித்த நம்மை யாரோ நாலு பேர் ஒரு மறைப்பை போட்டு குளிப்பாட்டுவார்கள்.
oriflame,head and shoulder,shower gel,johnsons ஒன்றுமில்லை.சந்தனமும் இலந்தை இலையும் கொண்டு குளிப்பாட்டி வைப்பார்கள்.
அலுமாரி நிறைய கலர் கலரா துணி மணி....
வெள்ளை நிறத்தில் கை ஊசியால் தைத்த ஒரு துணியால் சுற்றப்படுவோம்.fit on பார்க்காமலே உடலுக்கு பொருந்தி விடும்.
சாம்பிராணி புகை போட்டு கிடத்தி வைத்திருப்பார்கள்.இனி நம்மால் கிருமி தொற்று ஏற்படலாம்.
#அதுதான்_யதார்த்தம்...
கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்.
இத்தனை நாள் தூற்றியவனும் போற்றுவான்.
புறக்கணிக்கப்பட்ட சேவையெல்லாம் மேடையேறும்.
செய்யாத நற்பணிக்கும் நமது பெயரிடப்படும்.
வாழும் போது நோகடித்தவனும் இப்போது வந்து உறவாடுகிறான்.மௌனமாய் மன்னிப்பு கேட்கிறான்.
#இனி_எதற்காக_எல்லாம்....?
நேரம் போகிறது,கொண்டு போகலாம் என்று சந்தூக்கில் வைத்து விடுவார்கள்.
குடும்பத்தாரின் ஓலம் பெரிதாக வெடிக்கிறது.யாரும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.விறு விறுவென தூக்கிப் போய் விட்டார்கள்.
பள்ளியில் தொழுவித்து விட்டு மைய வாடிக்கு கொண்டுவருவார்கள்.
மவ்லவி ஓதுவார்,பயான் சொல்வார்.எமக்கு அதில் என்ன பயன் இனி?இனி திருந்தவா முடியும்?
மருத்துவ கல்லூரியில் பிணத்தை வைத்து படிப்பது போல நம்மை வைத்தும் யாரோ இரண்டு பேர் படிப்பினை பெறுவார்கள்.
#கப்றுக்குள் காற்று வருமா?புழுக்கமாய் இருக்குமா?வெளிச்சம் வருமா? பூராண்,தேள் கடிக்குமா?எது வித அக்கறையும் இல்லாமல் நெருங்கிய உறவுகளே உள்ளே வைத்து விடுவார்கள்.
கொஞ்சம் கரண்ட் போனாலே வியர்த்து ஒழுகுமே!இனி என்ன செய்ய?....fan,air conditioner எதுவுமே இங்கில்லை.
காலில் புழுதி படாமல் உம்மா வளர்த்தார். 
வீட்டினுள் நடக்கும் போது மண் குத்தினாலும் மனைவியில் சீறிப் பாய்வோம்.
அதே புழுதியும் மண்ணும் கொண்டு மூடிவிட்டு உறவுகளெல்லாம் போய்விட்டனர்.
#அவ்வளவுதான்_வாழ்க்கை
இனி நடப்பது எல்லாம் எனக்கு மட்டுமான ரகசியங்கள்.எதையும் யாரிடமும் சொல்லி அழவோ,பீற்றிக் கொள்ளவோ முடியாது.இவ்வளவு நாள் ஆடிய ஆட்டமெல்லாம் ஓய்ந்து விட்டது.மண் தாலாட்டப் போகிறதா?நெருக்கப் போகிறதா?
#அவ்வளவுதான்_உலக_வாழ்வின்_மிச்சம்...
அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் 
அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும் 
இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்! 
என்றாவது எம்மை பற்றி ஏதாவது பேசிவிட்டு மறந்து விடுவார்கள்.
சில போது பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக் கொள்வார்கள்.
#அவ்வளவுதான்_மிச்சம்
ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும் சேர்ந்தே புதைந்து போகின்றன! 
இப்படி ஒவ்வொரு நாளும் உலகில் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்! 
நாளை அது நானாகவோ,வாசிக்கும் நீங்களாகவோ இருக்கலாம்.
நாளைய விடியல் நமக்கானது என்கின்ற 
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது 
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்!
அர்த்தமுள்ள 
வாழ்க்கையை வாழ்வோம்,மரணத்தை மீட்டிக் கொண்டே.....

0 கருத்துரைகள்:

Post a Comment