Header Ads



''இறைவனைத் தேடும் முயற்சியின் இறுதியில், இஸ்லாத்தில் இணைந்தேன்'' -ஜப்பானியப் பெண் கவுலா

பிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.

சார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும் மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான்.

மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை. ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய அக்கறையாக இருந்து வந்தது. நான் என்னொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது. கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத் தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ, தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

இஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்).

நான் கிறிஸ்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பைபிளைப் படித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு கடவுள் இருக்கிறார் என நம்பினேன். இறைவன் இருக்கத் தான் வேண்டும் என நான் நம்பினாலும் அவன் இருப்பதை நான் உணர முடியவில்லை. நான் சர்ச்சில் தொழுது பார்த்தேன். ஆனால் அது வீணில் தான் முடிந்தது. இறைவன் இல்லாமலிருப்பதைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை.

ஜென் அல்லது யோகா மூலமாக இறைவனை உணரலாம் என்று நினைத்துக் கொண்டு நான் புத்த மதத்தைப் படித்தேன். கிறிஸ்தவ மதத்தில் இருந்ததைப் போலவே பல உண்மையான விசயங்கள் அதிலும் இருந்ததைக் கண்டேன். ஆனாலும் நான் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியாத ஏராளமான விஷயங்கள் அதில் இருந்தன. என்னைப் பொறுத்தவரையில், இறைவன் இருந்தால் அவன் எல்லோருக்குமுள்ள இறைவனாக இருக்க வேண்டும். மேலும் சத்தியம் என்பது எளிமையானதாகவும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஏன் மக்கள் தங்களுடைய வழமையான வாழ்க்கையைத் துறந்து விட்டு இறைவனுக்கே தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இறைவனைத் தேடும் கடும் முயற்சியின் இறுதியை அடைய என்ன செய்வது என எனக்கு தெரியாமலிருந்தது. அப்பொழுது தான் நான் ஒரு அல்ஜீரிய முஸ்லிமைச் சந்தித்தேன். பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு எப்படித் தொழுவது என்று கூடத் தெரியவில்லை. அவனுடைய வாழ்க்கை ஒரு சரியான முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது. ஆயினும் அவன் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவனாக இருந்தான். ஆனால் எந்தவொரு அறிவுமேயில்லாமல் இறைவனை நம்புவதென்பது என்னை எரிச்சல்படுத்தி இஸ்லாத்தைக் கற்கத் தூண்டியது.

ஆரம்பமாக பிரஞ்சு மொழியிலுள்ள திருக்குர்ஆனை வாங்கிப் படித்தேன். ஆனால் என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அது மிகவும் விநோதமாகவும் போரடிப்பதாகவும் இருந்தது. தனியாக அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு விட்டு எனக்கு உதவி செய்யும்படி யாரையாவது கேட்பதற்காக பாரீசிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றேன். சகோதரிகள் என்னை நன்றாக வரவேற்றனர். இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்களை நான் சந்திப்பது அதுவே முதல் முறை.

கிறிஸ்தவ பெண்களுடன் இருக்கும் போது மிகவும் அந்நியத்தை உணர்ந்த நான், வியக்கும் வகையில் முஸ்லிம் சகோதரிகளோடு மிகவும் அன்னியோன்யமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். முஸ்லிம் சகோதரி ஒருவரால் கொடுக்கப்பட்ட பத்தகம் ஒன்றை படித்தும் வந்தேன். சொற்பொழிவின் ஒவ்வொரு வாக்கியமும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமு; நான் முன்னர் ஒரு போதும் அநியாத ஆத்மீக திருப்தியை தரும் இறை வெளிப்பாடாகவே எனக்கு இருந்தது. சத்திய ஊற்றில் மூழ்கிய உணர்வு என்னுள் பொங்கியது. அதிசயமானது என்னவெனில், ஸ{ப்ஹானல்லாஹ்..! நான் ஸஜ்தாவிலிருக்கும் போது இறைவன் எனக்கு மிக அருகிலிருக்கும் உணர்வைப் பெற்றேன்.

No comments

Powered by Blogger.